பாக். உளவாளியை விளம்பர தூதராக வைத்திருந்த கேரள அரசு.. பாஜக விமர்சனம்!
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. எனினும், தொடர்ந்து பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான தகவல்களைச் சேகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவைச் சேர்ந்த சிலரே, உளவாளிகளாகச் செயல்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த வகையில், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உட்பட வட இந்திய மாநிலங்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், பாகிஸ்தான் அதிகாரிகளுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தகவல் வெளியானது. அதில், ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி எஹ்சான்-உர்-ரஹீம் (டேனிஷ்) என்பவருடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும், பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு முக்கியமான தகவல்களை அனுப்பியதாகவும் உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் ஜோதி மல்கோத்ரா காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கேரள அரசு தங்கள் மாநில சுற்றுலாவை உலகளவில் பிரபலப்படுத்துவதற்காக வெளிமாநிலங்களை சேர்ந்த 41 யூட்யூபர்களை அழைத்து, தங்கள் செலவில் பல்வேறு இடங்களை சுற்றிக்காட்டியது. இதில் ஜோதி மல்ஹோத்ராவும் ஒருவர் என்பது RTI மூலம் தெரியவந்துள்ளது. ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் என்பது தற்போதுதான் தங்களுக்கே தெரியவருவதாக கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ.முகமது கூறியுள்ளார். இந்நிலையில் விளம்பர தூதர்களாக செயல்பட அழைப்பவர்களின் பின்னணியை மாநில அரசு ஆய்வு செய்யாதது ஏன் என பாஜக கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளது.