அடேங்கப்பா... சுந்தர் பிச்சையின் பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா?
சுந்தர் பிச்சை 2004 முதல் கூகிளில் பணியாற்றி வருகிறார். 2015 இல் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். 2019 முதல் கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கூகிளின் தாய் நிறுவனமான Alphabet Inc, சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவலை தெரிவித்திருந்தது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சை 10.73 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஊதியமாகப் பெற்றுள்ளார். இந்த சம்பளம் ஒரு சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 32 மடங்கு அதிகமாகும். அதேசமயம், அவரது பாதுகாப்பிற்காக மட்டும் ஆல்பாபெட் நிறுவனம் செலவு செய்யும் தொகை அனைவரின் கவனத்தையும் பெற்றிருக்கிறது.
அதன்படி, கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்காக ஆல்பாபெட் நிறுவனம் சுமார் 8.27 மில்லியன் டொலர்களை (ரூ 70.43 கோடி) செலவிடுகிறது. இது முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட 6.78 மில்லியன் அமெரிக்க டொலர்களை விட 22 சதவீதம் அதிகமாகும். இத்தகவலை அமெரிக்க பங்குச் சந்தைக்கு அளித்த தகவலில் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பதன் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, இவருக்கு இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆல்பாபெட் தெரிவிக்கிறது. கூகுள் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்கள் நலனுக்கு இந்த செலவுகள் மிகவும் அவசியமான ஒன்று என்றும் இதை தனிப்பட்ட நபருக்கான செலவாக பார்க்கக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், வீட்டு கண்காணிப்பு முதல் பயணப் பாதுகாப்பு , தனிப்பட்ட ஓட்டுநர்கள் என அனைத்தும் அடங்கும். தொழில் விரிவாக்கத்திற்காக பல்வேறு
நாடுகளுக்கு இவர் செல்வதாலும், பல்வேறு தொழில் போட்டிகள் இருக்கும் என்பதாலும், இவ்வளவு அதிக தொகையை
பாதுகாப்புக்காக செலவிடுவது
அவசியமாகிறது என்றும் அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு சம்பளம் 91 கோடி ரூபாய் ஆகும். ஆனால் அவருக்கான பாதுகாப்பு செலவுகள் ஊதியத்தில் ஏறக்குறைய 3ல் 2 பங்காக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.