கன்னட நடிகை தங்கம் கடத்திய வழக்கு.. ரூ.102 கோடி அபராதம்.. யார் இந்த ரன்யா ராவ்?
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை கைது
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகளால் கடந்த மார்ச் 4ஆம் தேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், அவரிடமிருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவ், அடிக்கடி துபாய் சென்று வந்துள்ளார். இதையடுத்து, DRI அதிகாரிகள் நடிகையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். அதன்பேரிலேயே நடிகை தங்கக் கடத்தலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின், பெங்களூருவின் லாவெல் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற டிஆர்ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.2.67 கோடி மதிப்புள்ள ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.17.29 கோடி ஆகும். மேலும், பெங்களூரு விமான நிலையத்தில் சமீபகாலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய தங்கப் பறிமுதல்களில் இதுவும் ஒன்று என டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில் நாளுக்குநாள் புது தகவல்கள் வெளியாகின. தவிர, மாநில அரசியலிலும் ரன்யா ராவின் தங்கக் கடத்தல் விவகாரம் புயலைக் கிளப்பியது.
விசாரணையில் வெளியான ’பகீர்’ தகவல்கள்!
ஒவ்வொரு முறையும் அவர் விமான நிலையத்தில், தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், தங்கக் கட்டிகளை கடத்திவரும் குருவிபோல் நடிகை ரன்யா ராவ் செயல்பட்டு வந்ததும், ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்து கொடுத்தால் அவருக்கு 5 லட்சம் ரூபாயை கடத்தல் கும்பல் கொடுப்பதாகவும் தகவல் வெளியானது. தங்கத்தை கடத்தி வரும்போதெல்லாம் ஏடிஜிபியின் மகள் எனக் கூறி விமான நிலைய சோதனையில் இருந்து நடிகை ரன்யா ராவ் தப்பித்து வந்ததாகவும், இந்த முறை வசமாக சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே விசாரணையில், அவர் ஒரு வருடத்தில் துபாய்க்கு மட்டும் 27 முறை பயணம் செய்ததாகவும் தெரிய வந்தது. மேலும் நடிகை ரன்யா ராவ் வருவாய் அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், 17 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதையும், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள், துபாய், சவுதி அரேபியா ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டதையும் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
ஜாமீன் மறுப்பு.. ஒரு வருடம் சிறைத்தண்டனை
இதற்கிடையே சிறையில் அடைக்கப்பட்ட அவர், தொடர்ந்து ஜாமீன் பெற முயன்றார். எனினும், அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. இதற்கிடையே, கடந்த ஜூலை மாதம் தங்கக் கடத்தல் வழக்கில், கடுமையான அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கோஃபெபோசா (COFEPOSA) கீழ் ரன்யா ராவுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரன்யா ராவுக்கு ஒரு வருட காலத்திற்கு ஜாமீன் பெற வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்ததும் கடத்தலில் ஈடுபடுவதைத் தடுக்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. வழக்கில் நடிகை ரன்யா ராவ் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் ஜாமீன் பெற பலமுறை முயற்சித்ததைத் தொடர்ந்து, மத்திய அமைப்புகள் இந்த நடவடிக்கையை எடுத்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
நடிகையின் தந்தை சொன்ன பதில்..
மேலும், இந்த விவகாரம் குறித்து ரன்யா ராவின் தந்தையும் கர்நாடக மாநில காவல்துறை வீட்டுவசதி கழகத்தின் தலைமை இயக்குநருமான ராமச்சந்திர ராவ், “ஊடகங்கள் மூலம் இது என் கவனத்திற்கு வந்தபோது நானும் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
கர்நாடக அரசியலில் புயலைக் கிளப்பிய நடிகையின் விவகாரம்
ஒருபுறம், கன்னட நடிகை ரன்யா ராவ் வீங்கிய கண்கள் மற்றும் காயங்களுடன் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனால், அவர் கைது செய்யப்பட்ட பின்பு தாக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகத்தைத் தூண்டியது. இதுகுறித்து கர்நாடக மாநில மகளிர் ஆணையத் தலைவர் நாகலட்சுமி சவுத்ரி, ’நடிகை பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு ஆதரவு தெரிவிப்போம்’ என அப்போது தெரிவித்திருந்தார்.
இன்னொரு புறம், நடிகை ரன்யா ராவ் விவகாரம் மாநில அரசியலில் புயலைக் கிளப்பியது. அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது. அதற்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. அதேநேரத்தில், ரன்யா ராவ் குறித்து கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் நகரத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பசங்கவுடா பாட்டீல் யாட்னல் ஆபாசமாக தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!
இந்த நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் மீது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.102 கோடி அபராதம் விதித்துள்ளதாக டிஆர்ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவருடன் சேர்ந்து, ஹோட்டல் அதிபர் தருண் கொண்டராஜுவுக்கு ரூ.63 கோடியும், நகைக்கடைக்காரர்கள் சாஹில் சகரியா ஜெயின் மற்றும் பரத் குமார் ஜெயின் ஆகியோருக்கு தலா ரூ.56 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டி.ஆர்.ஐ. அதிகாரிகள், பெங்களூரு மத்திய சிறைக்குச் சென்று, ஒவ்வொருவருக்கும் அதுதொடர்பான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
யார் இந்த ரன்யா ராவ்?
கர்நாடகாவின் சிக்மகளூருவைச் சேர்ந்த ரன்யா ராவ், பெங்களூருவில் உள்ள தயானந்த் சாகர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் ஆவார். 2014ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக 'மாணிக்யா' படத்தில் ரன்யா ராவ் அறிமுகமானார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா (2016) என்ற படத்திலும் நடித்துள்ளார். அவர், ஐபிஎஸ் அதிகாரியும் காவல்துறை இயக்குநர் ஜெனரலுமான (காவல்துறை வீட்டுவசதிக் கழகம்) ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் என்று கூறிக் கொள்கிறார். அவருடைய முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு மகள்களில் ரன்யாவும் ஒருவர்.