பெங்களூரு | ஏர்போர்ட்டை அடுத்து நடிகையின் வீட்டிலும் தங்கம் பறிமுதல்.. யார் இந்த ரன்யா ராவ்?
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால் நேற்று பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், அவரிடமிருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவ், அடிக்கடி துபாய் சென்று வந்துள்ளார். இதையடுத்து, DRI அதிகாரிகள் நடிகையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்துள்ளனர். அதன்பேரிலேயே நடிகை தங்கக் கடத்தலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, 14 நாள் நீதிமன்றக் காவலில் இருக்க உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், “ஒவ்வொரு முறையும் நடிகை ரன்யா ராவ் விமான நிலையத்தில், ’தான் DGPயின் மகள்’ என்று கூறிவிட்டுச் செல்வார். பின்னர் வெளியே சென்றவுடன், காவல்துறையினரைப் பாதுகாப்புக்கு அழைத்துச் செல்வார். காவல்துறையினர் அவரை வீட்டில் இறக்கிவிடுவார்கள்” என போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து, நடிகையின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். பெங்களூருவின் லாவெல் சாலையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற டிஆர்ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டில் நடிகை ரன்யா ராவ் தனது கணவருடன் வசித்து வந்தார்.
இந்தச் சோதனையில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.2.67 கோடி மதிப்புள்ள ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.17.29 கோடி ஆகும். மேலும், பெங்களூரு விமான நிலையத்தில் சமீபகாலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய தங்கப் பறிமுதல்களில் இதுவும் ஒன்று என டிஆர்ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ரன்யா ராவின் தந்தையும் கர்நாடக மாநில காவல்துறை வீட்டுவசதி கழகத்தின் தலைமை இயக்குநருமான ராமச்சந்திர ராவ், “ஊடகங்கள் மூலம் இது என் கவனத்திற்கு வந்தபோது நானும் அதிர்ச்சியடைந்து மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த விஷயங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர், எங்களுடன் வசிக்கவில்லை. அவர், தன் கணவருடன் தனியாக வசிக்கிறார். அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்னை இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ரன்யா ராவ்?
கர்நாடகாவின் சிக்மகளூருவைச் சேர்ந்த ரன்யா ராவ், பெங்களூருவில் உள்ள தயானந்த் சாகர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் ஆவார். 2014ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக 'மாணிக்யா' படத்தில் ரன்யா ராவ் அறிமுகமானார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா (2016) என்ற படத்திலும் நடித்துள்ளார். அவர், ஐபிஎஸ் அதிகாரியும் காவல்துறை இயக்குநர் ஜெனரலுமான (காவல்துறை வீட்டுவசதிக் கழகம்) ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் என்று கூறிக் கொள்கிறார். அவருடைய முதல் மனைவி இறந்துவிட்டார். இதையடுத்து அவர் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவருடைய முதல் மனைவிக்கு பிறந்த இரண்டு மகள்களில் ரன்யாவும் ஒருவர்.