ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டு கொல்லப்பட்ட மாவோயிஸ்ட்.. யார் இந்த ஜாலபதி.. சிக்கியது எப்படி?
இந்தியாவில் நக்சல் அமைப்பினர் தாக்கல் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. நக்சல் பாதிப்பு அதிமுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கு தொடர்கதையாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.
அந்த வகையில், கடந்த ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சத்தீஸ்கர் - ஒடிசா எல்லையை ஒட்டிய மெயின்பூர் காவல்நிலைய பகுதிக்கு உட்பட்ட காட்டில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது 14 நக்சல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 2026க்குள் மாவோயிஸ்டுகளை ஒழிப்போம் என்று சபதம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த என்கவுன்டரை ’நக்சலிசத்திற்கு மற்றொரு பெரிய அடி’ எனக் குறிப்பிட்டார். அதேநேரத்தில், இந்த சம்பவத்தில் நகசல் அமைப்புக்கு மூளையாகச் செயல்பட்ட மூத்த மாவோயிஸ்ட் தலைவரான ஜாலபதி என்றழைக்கப்படும் ஜெயராம் ரெட்டியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்ஃபி எடுத்தபோது சிக்கிய மாவோயிஸ்ட்
சலபதி என்றும் அழைக்கப்படும் மூத்த மாவோயிஸ்ட் தலைவரான ஜெயராம் ரெட்டி (ராமகிருஷ்ணா), தனது மனைவி அருணா என்ற சைதன்யா வெங்கட் ரவியுடன் ஒரு செல்பி எடுத்தபோது, இந்த ஆபரேஷனில் சிக்கி உயிரை இழந்துள்ளார். அந்த செல்ஃபிதான் பாதுகாப்புப் படையினருக்கு ஜெயராம் ரெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து மே 2016இல் மீட்கப்பட்ட ஸ்மார்ட்போனில் அவரது படம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது தலைக்கு அரசால் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது இதனால் 8-10 தனிப்படை காவலர்களுடன் அவர் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
யார் இந்த மாவோயிஸ்ட் ஜெயராம் ரெட்டி?
முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர், இந்த ஜெயராம் ரெட்டி. அப்போது காவல் துறையினரின் ஆயுதக் களஞ்சியத்தைக் கொள்ளையடித்துச் சென்றார். அதன்பிறகு, பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல் கும்பலுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலின்போதும் அவர் தப்பிச் சென்றுள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் சித்தூரில் வசித்தவர் இந்த ஜெயராம் ரெட்டி. இவர், மாவோயிஸ்டுகளின் மத்தியக் குழுவின் மூத்த உறுப்பினராக இருந்துள்ளார். அவர் முக்கியமாக சத்தீஸ்கரின் பஸ்தாரில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, சத்தீஷ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள தரபாவில், முழங்கால்களில் ஏற்பட்ட பிரச்னையால் அதிகம் பயணம் செய்ய முடியாமல் அங்கேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில், அப்பகுதியில் சமீபத்தில் என்கவுன்டர்கள் அதிகரித்ததால் அவரது இடத்தை மாற்றிக்கொண்டார்.
அவர் ராணுவ தந்திரம் மற்றும் கொரில்லா போர் முறையில் நிபுணராகச் செயல்படக்கூடியவர் எனக் கூறப்படுகிறது. சில தென் மாநிலங்களில் அழிவை ஏற்படுத்திய தடைசெய்யப்பட்ட மக்கள் போர் குழுவில் (PWG) சலபதி தனது ஆரம்ப ஆண்டுகளில் சேர்ந்துள்ளார். அவர் பள்ளிக்குச் செல்லவில்லை, ஆனால் அவர் ஒரு ஆர்வமுள்ள வாசகர், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். அவர் காடுகளில் வாழ்ந்த காலத்தில், ஆந்திர - ஒடிசா எல்லை சிறப்பு மண்டலக் குழுவின் (AOBSZC) துணைத் தளபதியான அருணா என்கிற சைதன்யா வெங்கட் ரவியுடன் நெருங்கிப் பழகினார். இதையடுத்து, அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.