மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. தமிழர்கள் இருக்கும் பகுதிகளில் பதற்றம்... நடந்தது என்ன? முழு விபரம்
செய்தியாளர் பாலவெற்றிவேல்
மீண்டும் கலவரம்
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி இனக்குழுவினரிடையே மோதல் மீண்டும் அதிகரித்துள்ளதால் உணவு, பால், மருந்து உள்ளிட்ட அடிப்படைப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பழங்குடி மக்கள் வாழும் மலைப்பகுதியிலும் பள்ளத்தாக்கிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை 2 முதல் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
மெய்தி அமைப்பான ‘அரம்பாய் தெங்கொல்’ அமைப்பின் மூத்த உறுப்பினர் கனன் சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தலைநகர் இம்பால் உட்பட சமவெளி பகுதியில் வன்முறை ஏற்பட்டது. அதே நேரத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரமான மொரேவில் கடந்த ஜூன் 5 அன்று NIA அமைப்பினர் குக்கி இனத்தைச் சேர்ந்த காம்கின்டாங் காங்டே என்பவரைக் கைது செய்தனர். இதனால், பழங்குடி மக்கள் வசிக்கும் மலைப்பகுதியிலும் பதற்றம் ஏற்பட்டது. இந்த இரண்டு கைது நடவடிக்கைகளை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வன்முறை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு
கலவரங்களைத் தடுக்கும் வகையில், பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டு, இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவ்வளவு நாட்களாக மணிப்பூரின் அண்டை மாநிலங்களான அசாம், நாகலாந்து, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்த காய்கறிகள், இறைச்சி, உணவு பொருட்கள், மருந்து பொருட்களுக்கு தடை ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அசாம் மற்றும் நாகாலாந்தை இணைக்கும் முக்கிய விநியோகப் பாதைகளான தேசிய நெடுஞ்சாலைகள் 02 மற்றும் 37 தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதன் காரணமாக மணிப்பூர் மாநிலத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
முன்பு இம்பாலுக்கு நேரடியாக வந்த பொருட்கள் தற்போது மிசோரம் வழியாக திருப்பி விடப்படுவதால், போக்குவரத்து செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. உதாரணமாக, தேசிய நெடுஞ்சாலையை சரக்கு வாகனங்கள் பயன்படுத்த முடியாததன் காரணமாக பல நூறு கிலோமீட்டர்கள் சுற்றி சமவெளி பகுதிகளுக்குள்ளும், சமவெளிப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கும் செல்வதால் போக்குவரத்து செலவு அதிகமாகின்றது. இதனால் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.
தட்டுப்பாடு வர்த்தகர்களால் செயல்படுத்தப்பட்டதல்ல
இது உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. தற்போதைய இவ்வன்முறை காரணமாக, கடுமையான நோய்களுக்கான மருந்துப் பொருட்களைப் பெற முடியவில்லை என தெரிவிக்கிறார் சூரசந்த்பூர் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் மேக்ஸ் முவான். அவர் கூறுகையில், “அரிசி, தக்காளி, வெண்டைக்காய், மீன்கள் இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு கடைக்காரர்கள் அல்லது வர்த்தகர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்படவில்லை. சரக்கு வாகனங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் தொடர்ந்து தட்டுப்பாடுகள் ஏற்பட்டு அதன் மூலம் விலை அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கின்றார்.
ஏற்கனவே, ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழையின் கோர தாண்டவத்தால் இம்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல வன்முறையும் மீண்டும் மணிப்பூரில் தீவிரமடைந்துள்ளதால் 2023க்கே திரும்பி செல்வது போல உணர்வதாக மணிப்பூர் மக்கள் வேதனை குரலோடு பகிர்கின்றனர்.