தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் - பிரதமர் மோடி!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதில் முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் தருவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்ட குழு கூட்டத்தில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறை இருப்பது தெரியவந்துள்ளது. இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், முப்படைகளின் தளபதிகள், தேசிய பாதுகாப்புச் செயலர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி நேற்றைய தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி நடவடிக்கையை எந்த வகையில், எப்படி, எப்போது மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்தையும் ராணுவம் தீர்மானிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியாக்கியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராக உரிய பதிலடி கொடுப்பதில் நமது தேசம் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது என்றும், தேசத்தின் ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன் சார்ந்து தனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கான பதிலடி விவகாரத்தில் முப்படைகளுக்கு முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்து இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.