உத்தராகண்ட்: திடீரென இடிந்த சுரங்கம்; சிக்கிய 40 சுரங்கப் பணியாளர்கள்... தொடரும் மீட்பு நடவடிக்கை!

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்க விபத்தில் சிக்கிக்கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மீட்புப் பணி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என பார்க்கலாம்.
மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்
மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்pt web

உத்தர்காசி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சுரங்கத்திற்குள் சுமார் 265 மீட்டர் தூரத்தில் சுரங்கத்தின் வடிவத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சுமார் 40 பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் பணி செய்து கொண்டிருந்த இடத்தில் இருந்து சுமார் 55 மீட்டர் தூரத்தில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பணியாளர்களுக்கும், சுரங்கத்தின் நுழைவுப் பகுதிக்குமான பாதை துண்டிக்கப்பட்டு அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். உள்ளே சிக்கிக் கொண்டவர்கள் உத்தராகண்ட், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

சுரங்கத்திற்குள் பணியாளர்கள் சிக்கிக் கொண்டதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. முதற்கட்டமாக உள்ளே இருக்கும் பணியாளர்களுடன் தொடர்பினை ஏற்படுத்துவதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருள்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை வழங்குவதாக இருந்தது. இதன் மூலம் பணியாளர்களுக்கு, அவர்கள் கண்டிப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை வழங்குவதும் அவசியமாக இருந்தது.

மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள்
அதிர்ச்சி! உத்ராகண்ட்டில் பணியின் போது இடிந்த சுரங்கப்பாதை.. என்ன ஆனார்கள் 40 தொழிலாளர்கள்?

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 160 பணியாளர்கள் துளையிடும் இயந்திரம், இடிபாடுகளை தோண்டி அகற்றும் இயந்திரம் போன்றவற்றின் உதவியோடு மீட்புப் பணியைத் தொடர்ந்து வருகின்றனர். இடிபாடுகளுக்கு அப்பால் சுரங்கத்திற்குள் இருக்கும் சுரங்கப் பணியாளர்களை வாக்கி டாக்கி மூலம் திங்களன்று காலை முதல் தொடர்பு கொள்ள முடிந்ததாகவும், அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் செல்வதற்கான இருகுழாய்களில் ஒரு குழாய் மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருள்களும், மற்றொரு குழாய் மூலம் ஆக்சிஜனும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டவர்களுக்கு அனுப்பப்படுகின்றன என்றும், சிக்கி உள்ள பகுதியில் சுமார் 400 மீட்டர் வரை அவர்களால் நடமாட முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளே இருப்பவர்களை மீட்க 60 மீட்டர் தூரத்திற்கு வழி ஒன்றை உருவாக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதில் 20 மீட்டர் தூரத்திற்கு இடிபாடுகளை அகற்றி பாதையை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள தூரத்திற்கு பாதை அமைக்கும் பணிகள் கவனமுடன் நடைபெற்று வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

20 மீட்டருக்குப் பின் இடிந்த பகுதியில் உள்ள மண் மிகவும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக உள்ளதால் தொடர்ந்து சரிவு ஏற்படுவதால் பாதை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் அப்பகுதிகளில் மேற்கொண்டு மண்சரிவு ஏற்படாமல் இருக்கத் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இடிபாடுகள் வழியே 900 மில்லி மீட்டர் அதாவது சுமார் 3அடி விட்டம் கொண்ட குழாய் ஒன்றை செலுத்தி பணியாளர்களை மீட்கும் வகையிலும் திட்டம் ஒன்றை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயத்தில் இந்த விபத்து குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உத்தராகண்ட் அரசு அமைத்துள்ளது. இக்குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் எதிர்காலத்தில் சுரங்கப்பாதை பணிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com