பெங்களூரு | ’வாடகைக்கு காதலன் வேண்டுமா.. ஒருநாளுக்கு ரூ 389..’ வைரலான போஸ்டர்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வாடகைக்கு காதலன் வேண்டுமா? என ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் பரவி, நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூருவின் ஜெயாநகர், பானா ஷங்கரி மற்றும் பிடிஏ காம்ப்ளக்ஸ் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், நாளொன்றுக்கு 389 ரூபாய் கட்டணத்திற்கு காதலனை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காதலர் தினத்தையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டரை புகைப்படம் எடுத்த அப்பகுதிவாசிகள், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த பதிவுக்கு பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கலாசாரத்தை சீர்குலைக்கும் இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர், சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் தனிமையை எதிர்கொள்ள பயன்படுத்தப்படும் கலாசாரம் சமீப நாட்களாக இந்தியாவிலும் தலைதூக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.