கோக், பெப்சி-க்கு போட்டி.. வெளிநாடுகளிலும் களமிறங்கும் ரிலையன்ஸின் கேம்பா குளிர்பானம்!
கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில், குளிர்பான விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஏற்கெனவே குளிர்பான சந்தையில் பெப்சி, கோகோ கோலா போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கத்தைச் செலுத்திவரும் நிலையில், குறைந்த விலையில் தயாராகும் உள்ளூர் தயாரிப்புகளும் அவைகளுடன் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, குளிர்பான வணிகத்தையும் கையிலெடுத்து நடத்தி வருகிறார்.
1970-80களில் இந்திய கோல்ட் டிரிங்க் சந்தையில் முன்னிலையில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த கேம்பா கோலா (Campa Cola), வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளான கோகோ கோலா, பெப்சி உள்ளிட்டவற்றால் அதன் சந்தை மதிப்பு குறையத் தொடங்கியது. தொடர்ந்து வணிகத்தில் நஷ்டத்தைச் சந்தித்தால் அதன் ஆலைகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில்தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அதை வாங்கி, சந்தைப்படுத்தி வருகிறது. அதன்படி, கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு மற்றும் கேம்பா லெமன் எனும் மூன்று வகையான குளிர்பானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 200 மிலி, 500 மிலி, 600 மிலி, 1லி, 2லி ஆகிய அளவுகளில் முறையே 10, 20, 30, 40 மற்றும் 80 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானாவில் விற்பனை செய்யப்பட்ட இவ்வகை குளிர்பானம், தற்போது நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது. இந்த நிறுவனத்துடன், இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனமும் ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் தனது கேம்பா மென்பானத்தை முதன்முறையாக இந்தியாவுக்கு வெளியேயும் விற்கத் தொடங்கியுள்ளது. அபுதாபியை சேர்ந்த அக்தியா என்ற நிறுவனத்துடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் கேம்பா பானங்கள் விற்கப்படும் என ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. தீவிர சந்தைப்படுத்துதல் மூலம் கோக கோலாவுக்கும், பெப்சிக்கும் கடும் சவாலாக இருந்து கேம்பா, தற்போது இந்தியாவுக்கு வெளியே கால் பதித்திருக்கும் கேம்பா, அமீரகத்திற்கு அடுத்து பிற மேற்காசிய நாடுகளிலும், அடுத்து ஆப்பிரிக்காவிலும் கிளைபரப்ப திட்டமிட்டுள்ளது.