முத்தையா முரளிதரனுடன் கைகோர்த்த முகேஷ் அம்பானி! ஏன் தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனுடன், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணைந்திருப்பது வணிகச் சந்தையில் பேசுபொருளாகி உள்ளது.
முகேஷ் அம்பானி, முரளிதரன்
முகேஷ் அம்பானி, முரளிதரன்twitter page

கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில், குளிர்பான விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஏற்கெனவே குளிர்பான சந்தையில் பெப்சி, கோகோ கோலா போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், குறைந்த விலையில் தயாராகும் உள்ளூர் தயாரிப்புகளும் அவைகளுடன் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்திருக்கும் முகேஷ் அம்பானி, குளிர்பான வணிகத்தையும் கையிலெடுத்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த கேம்பா கோலா (Campa Cola) குளிர்பான நிறுவனத்தை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதுடன், அதைச் சந்தைப்படுத்தவும் முடிவு செய்தது. அதன்படி, கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு மற்றும் கேம்பா லெமன் எனும் மூன்று வகையான குளிர்பானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 200 மிலி, 500 மிலி, 600 மிலி, 1லி, 2லி ஆகிய அளவுகளில் முறையே 10, 20, 30, 40 மற்றும் 80 ரூபாய் என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் இவ்வகை குளிர்பானம், தற்போது நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வணிகத்தை நாடு முழுவதும் சந்தைப்படுத்தும் நோக்கில் உள்ளூரில் உள்ள சில பிரபலமான குளிர்பான நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் கேம்பா கோலா கிடைப்பதற்கு வழிவகுக்கும் வகையில், அதன் உற்பத்தியை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையிலேயே இதற்கான ஒப்பந்தகள் போடப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கேம்பா கோலாவை மேலும் முன்னேற்றும் வகையில், இலங்கை நிறுவனத்துடனும் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக, இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முரளிதரனின் நிறுவனம் அலுமினியம் கேன்களில் கேம்பா கோலாவை பேக்கிங் செய்து விநியோகம் செய்ய உள்ளது. சிலோன் பீவரேஜஸ் நிறுவனம் வரும் காலத்தில் பேக்கிங் பணிக்காக பேக்கேஜிங் ஆலையை இந்தியாவில் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலை செயல்பாட்டுக்கு வரும் வரையில், சிலோன் பெவரேஜஸ் இலங்கை தொழிற்சாலையில் இருந்து டின்னில் அடைக்கப்பட்ட காம்பா கோலா தயாரித்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் எனக் கூறப்படுகிறது.

1970-80களில் இந்திய கோல்ட் டிரிங்க் சந்தையில் முன்னிலையில் இருந்த கேம்பா கோலா, வெளிநாட்டு நிறுவன தயாரிப்புகளான கோகோ கோலா, பெப்சி உள்ளிட்டவற்றால் அதன் சந்தை மதிப்பு குறையத் தொடங்கியது. தொடர்ந்து வணிகத்தில் நஷ்டத்தைச் சந்தித்தால் அதன் ஆலைகளும் மூடப்பட்டன. இந்த நிலையில்தான் முகேஷ் அம்பானி புதிய உத்வேகத்துடன் கேம்பா கோலாவை மீண்டும் சந்தைப்படுத்தியிருக்கிறார். அத்துடன், முரளிதரனுடனும் இணைந்திருப்பது வணிக உலகத்தில் உற்று நோக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com