ஹைதராபாத் பல்கலை. நிலம் விவகாரம்|மூத்த IAS அதிகாரி பகிர்ந்த AI வீடியோ.. அரசு எடுத்த உடனடி நடவடிக்கை!
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் காஞ்சா கச்சிபௌலியில் உள்ள 400 ஏக்கர் நிலத்தை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில், ஒரு ஐடி பூங்காவை அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், ’மாநிலத்தில் முதலீட்டை ஊக்குவிப்பதே தனது குறிக்கோள் என்றும், அந்த நிலத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றும் அரசாங்கம் பதிலளித்தது. இந்த நிலையில், சமீபத்தில் மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக புல்டோசர்கள் மற்றும் மண் அள்ளும் இயந்திரங்கள் அப்பகுதிக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து காவலர்கள் குவிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்படனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள 400 ஏக்கர் நிலத்தில் மரங்களை வெட்டுவது தொடர்பாக AI-யால் உருவாக்கப்பட்ட கிப்லி படத்தை சமூக ஊடகங்களில் மீண்டும் வெளியிட்டதற்காக சமீபத்தில் காவல்துறையினரால் சம்மன் அனுப்பப்பட்ட மூத்த இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி ஸ்மிதா சபர்வால், தெலங்கானா அரசாங்கத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் இடமாற்றம் செய்யப்பட்ட 20 அதிகாரிகளில் இவரும் ஒருவர். தற்போது இளைஞர் முன்னேற்றம், சுற்றுலா மற்றும் கலாசாரம் (YAT&C) துறையின் சிறப்பு தலைமைச் செயலாளராகவும், தொல்லியல் துறை இயக்குநராகவும் இருக்கும் ஸ்மிதா சபர்வால், தெலங்கானா நிதி ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2024இல் YAT&C-க்கு மாற்றப்படுவதற்கு முன்பு அவர் அந்தப் பதவியை வகித்து வந்தார். முதலமைச்சரின் செயலாளராக, முந்தைய பி.ஆர்.எஸ் அரசாங்கத்தின்கீழ் ஒரு சக்திவாய்ந்த அதிகாரியாக இருந்த அவர், தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் அவர் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து (சி.எம்.ஓ) மாற்றப்பட்டு தெலங்கானா நிதி ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
முன்னதாக, மரங்களை வெட்டுவது தொடர்பாக AI-யால் உருவாக்கப்பட்ட கிப்லி படம் தொடர்பாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சைபராபாத் காவல்துறை முன் சபர்வால் ஆஜராகியிருந்தார். அப்போது, “இதே பதிவை மீண்டும் பகிர்ந்த 2,000 நபர்கள் மீதும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளுதா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.