”அப்படி என்றால் I-N-D-I-A கூட்டணியை கலைத்துவிடலாம்..” - உமர் அப்துல்லா சொல்வது என்ன?
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. முன்னதாக, இந்தக் கூட்டணியை ஆளும் பாஜகவுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உருவாக்கியிருந்தார். பின்னர், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் அப்போதே அதிலிருந்து விலகிய நிதிஷ், பாஜகவுக்குத் தாவினார்.
இதனைத் தொடர்ந்து ’I-N-D-I-A’ கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தி வருகிறது. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது.
முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது. மேலும், தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி, பெருத்த தோல்வியை அடைந்தது.
பெரும்பாலும் சட்டசபைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் காங்கிரஸை விரும்பவில்லை. கூட்டணியில்லாமல் தனித்தே போட்டியிட்டன. இது, தற்போதைய டெல்லி தேர்தலிலும் எதிரொலித்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மோதல் நிலவியதால் இரண்டு தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, மீண்டும் ’I-N-D-I-A’ கூட்டணி பற்றிய செய்தி விவகாரமெடுத்துள்ளது. டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்து போட்டியிடுவது குறித்து கருத்து பீகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், "மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிப்பதே ’I-N-D-I-A’ கூட்டணியின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அந்தத் தேர்தலுக்காகவே அத்தகைய கூட்டணி உருவாக்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், காங்கிரசுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் மோதல் ஏற்படுவது இயற்கைக்கு மாறானது அல்ல” எனத் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் டெல்லி தேர்தலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் களத்தில் உள்ள பிற அரசியல் கட்சிகள் பாஜகவை எவ்வாறு திறம்பட எதிர்த்துப் போராடுவது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை, டெல்லி வாக்காளர்கள் யாரை தேர்வு செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்தவரையில், I-N-D-I-A கூட்டணிக்கு காலவரையறை எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, I-N-D-I-A கூட்டணிக் கூட்டங்கள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அது நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டும் இருந்தால் அதை, அவர்கள் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே I-N-D-I-A கூட்டணி ஆட்டம் கண்டு வருகிறது. முன்னதாக, காங்கிரஸ் தலைமை ஏற்றிருப்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் தாம் தலைமை ஏற்கவும் விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, ஒருசில கட்சிகள் ஆதரவு அளித்திருந்தன. இந்த நிலையில் இவ்விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. மறுபுறம் டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கே மம்தா, சரத் பவார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பாஜவுக்கு மறைமுகமாக உதவுவதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.