ரூ .75,000 கோடி.. வங்கிகளில் இருக்கும் உரிமை கோரப்படாத பணம்.. எடுக்க இதோ எளிய வழி!
நீண்டகால உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் மொத்த மதிப்பு ரூ .75,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இத்தொகையை எடுக்குமளவிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இன்றைய அனைத்துப் பணப் பரிமாற்றத் தேவைகளுக்கும் வங்கிக் கணக்கு அவசியமாகிறது. ஆகையால் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்துப் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில், சில சூழ்நிலைகளால் அதாவது கடந்த காலத்தில் வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் அதுகுறித்து மறந்திருப்பார்கள் அல்லது அதைத் தொடராமல் விட்டிருப்பார்கள். இப்படியான உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளில் 90 சதவீதம் வரை இந்திய வங்கிகளில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த உரிமை கோரப்படாத தொகை டிஇஏ-க்கு மாற்றப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் இருக்கும் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (டிஇஏ) நிதியத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முதிர்வடைந்த பிறகு பத்தாண்டுகள் வரை யாரும் உரிமை கோராத டெபாசிட்களும் இந்த நிதியத்துக்கு மாற்றப்படுகின்றன. DEAக்கு மாற்றப்படும் ஒவ்வோர் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை / கணக்கிற்கும் UDRN எண் ஒதுக்கப்படுகிறது.
அந்த வகையில், மத்திய நிதியமைச்சகத்தின் கூற்றுப்படி, நீண்டகால உரிமை கோரப்படாத வைப்புத்தொகையின் மொத்த மதிப்பு ரூ .75,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இத்தொகையை எடுக்குமளவிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
UDGAM (Unclaimed Deposits – Gateway to Accelerated Information) என்ற இணையதளம் மூலம் அவற்றைப் பெறுவதற்கு வழிவகைகள் சாத்தியப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இணையதளத்தில் 30 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் மற்றும் கணக்குகளை அடையாளம் காண முடியும். முதலில் உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பதிவு செய்து, பிறகு அது கேட்கும் ஆவணங்ளை உறுதிப்படுத்தும் பட்சத்தில், வங்கி பற்றிய தகவல்கள் நமக்குத் தெரிய வரும். அந்த வகையில், உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மற்றும் கணக்குகள் பற்றிய விபரங்களை மட்டுமே இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். அவற்றிற்கு உரிமை கோர, சம்பந்தப்பட்ட வங்கிகளை தொடர்பு கொள்ள வேண்டும்.
இது தொடர்பாக, நாடு முழுவதும் 'உங்கள் பணம்-உங்கள் உரிமை' என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு செல்போன் எண்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் காகிதத்தில் உள்ள எண்கள் மட்டுமல்ல, அவை சாதாரண குடும்பங்களின் கடின உழைப்பால் சம்பாதித்த சேமிப்பைக் குறிக்கின்றன" எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கைகளை விரைவாக தீர்க்குமாறு அவர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

