12 பில்லியன் டாலர் மதிப்பு தங்கம்.. விற்பனை செய்ததா RBI? உண்மை என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்றதாக சமூக ஊடகங்களும் சில ஊடக அறிக்கைகளும் கூறிய நிலையில், அதை ரிசர்வ் பேங்க் மறுத்துள்ளது.
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்றதாக சமூக ஊடகங்களும் சில ஊடக அறிக்கைகளும் கூறின. ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையில், மே 22, 2026 அன்று முடிவடைந்த இரண்டு வாரங்களில், இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்றதாகவும், சுமார் 7.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள அந்நியச் செலாவணியை வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஈரான்-அமெரிக்கப் போர் மற்றும் வளர்ந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடிக்கு மத்தியில், ரூபாயின் சரிவைத் தடுக்கவும் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருபைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தன.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தங்க இருப்பு எவ்வித மாற்றமும் இன்றி 880.52 டன்களாக அப்படியே உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. நிதி சார்ந்த விவகாரங்களில் பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பரவும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பாமல், தாங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறு ஆர்பிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்பனை செய்ததாக வதந்திகள் பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து நிறைய தங்கத்தை இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டு வருகிறது என்பதுதான் தற்போதைய செய்தியாக உள்ளது. செப்டம்பர் 2025 முதல் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி 104 மெட்ரிக் டன் தங்கத்தை இந்தியாவில் உள்ள தனது கிடங்குகளுக்கு மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

