\
RBI cancels Paytm Payments Bank licence
paytmx page

Paytm Payments Bank இனி இயங்காது.. ரிசர்வ் வங்கி உத்தரவு.. சேமிப்புத் தொகையை எடுக்க முடியுமா?

உயர் நீதிமன்றத்தின் மூலம் வங்கியைக் கலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் வரை, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய முறையில் திருப்பி வழங்குவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளது. வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்படி, டெபாசிட் செய்தவர்களின் நலனைப் பாதுகாப்பதில் வங்கி தோல்வியடைந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் இந்த வங்கி இனி எந்த ஒரு வங்கிச் செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது.

வாடிக்கையாளர்களுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் உரிமத்தில் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றாததால் பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் செயல்பட்டதாலும், உரிமம் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கி பின்பற்றாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால், இந்த வங்கி தொடர்ந்து இயங்குவது பொதுமக்களின் நலனுக்கு உகந்தது அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ள ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமண்டண்ட்ஸ் வங்கிக்கான உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

இன்றைய வணிக நேரம் முடிந்தவுடன், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி எந்தவிதமான வங்கிச் சேவைகளையும் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.அதாவது, இனி புதிதாக வைப்புத் தொகைகளை ஏற்பது, பரிவர்த்தனைகள் செய்வது போன்ற எந்தவொரு வங்கிப் பணிகளையும் அந்த நிறுவனம் செய்ய முடியாது. எனினும், வங்கிச் செயல்பாடுகள் முடக்கப்பட்டாலும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதி ரிசர்வ் வங்கி சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

வங்கி உரிமம் ரத்து செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைக்கு (deposits) ஆபத்து இல்லை என்று ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது. வங்கியைச் சட்டப்பூர்வமாகக் கலைக்கும் பணியின்போது, வைப்புத் தொகையை முழுமையாகத் திருப்பித் தருவதற்குத் தேவையான போதிய பணப்புழக்கம் வங்கியிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், பேடிஎம் வங்கிச் சேவை நிறுத்தப்பட்டாலும் PAYTM App(UPI) மூலம் பிற வங்கிக் கணக்குகளை இணைத்து பணப்பரிவர்த்தனை செய்ய இயலும். உயர் நீதிமன்றத்தின் மூலம் வங்கியைக் கலைக்கும் நடவடிக்கைகள் தொடங்கும் வரை, வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய முறையில் திருப்பி வழங்குவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com