நடிகையின் தங்கக் கடத்தல் வழக்கால் கர்நாடக அரசியலில் புயல்! டிகே சிவக்குமார் கொடுத்த அதிரடி விளக்கம்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரது வீட்டில் மேலும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பேசுபொருளானது. நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கக் கட்டிகளை கடத்தி வரும் குருவி போல் நடிகை ரன்யா ராவ் செயல்பட்டு வந்ததும், ஒரு கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்து கொடுத்தால் அவருக்கு 5 லட்சம் ரூபாயை கடத்தல் கும்பல் கொடுப்பதாகவும் தகவல் வெளியாகினது. தங்கத்தை கடத்தி வரும்போதெல்லாம் ஏடிஜிபியின் மகள் எனக் கூறி விமான நிலைய சோதனையில் இருந்து நடிகை ரன்யா ராவ் தப்பித்து வந்ததாகவும், இந்த முறை வசமாக சிக்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே விசாரணையில் அவர் ஒரு வருடத்தில் துபாய்க்கு மட்டும் 27 முறை பயணம் செய்ததாகவும் தெரிய வந்தது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரித்து வருவதால், மாநில அரசு காவல் துறையின் விசாரணையை ரத்து செய்துள்ளது.
இதற்கிடையே ரன்யா ராவின் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவின. அதில் அவர் வீங்கிய கண்கள், காயம்பட்ட முகத்துடன் இருப்பது தெரிந்தது. இந்நிலையில்பெங்களுரு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், ``நான் எப்படி இந்த விவகாரத்திற்குள் வந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இந்தக் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக இருந்தும் என்னைத் தூங்கவோ, ஓய்வெடுக்கவோ விடமாட்டோம் என்கிறார்கள். வார்த்தைகளால் என்னைக் கொடுமைப்படுத்தி அச்சுறுத்துகிறார்கள். எமோஷனலாக நான் உடைந்துவிட்டேன்" என்று அதில் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் நடிகை ரன்யா ராவ் விவகாரம் மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டிருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டியிருந்தது. அதற்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. இதுகுறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ”ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது அதைப் பார்த்தீர்களா? தங்கம் கடத்திய ரன்யா ராவ் உடன் எந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா?
அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா? எங்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட நபர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டால் அவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என அர்த்தமா? ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவேளை பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. இது பாஜக-வின் சதி திட்டம். இதில் எந்தவொரு அமைச்சரும் ஈடுபடவில்லை என உறுதியாக நம்புகிறேன். இதுதொடர்பாக முதல்வர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.