ராஜஸ்தான் | பாதியில் நின்ற நிச்சயதார்த்தம்; மாப்பிள்ளையின் சகோதரரின் மீசையை வெட்டிய பெண் வீட்டார்!
ராஜஸ்தானில் நிச்சயதார்த்த நிகழ்வை பாதியில் நிறுத்திய மணமகனால், ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், மாப்பிள்ளையின் சகோதரரின் மீசையை வெட்டி எடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அப்பளம் கொடுக்கவில்லை, சாப்பாத்தி கொடுக்கவில்லை என்று ஏதேதோ காரணங்கள் முன்வைக்கப்பட்டு பல திருமணங்கள் அடிதடியில் முடிந்திருக்கிறது. ஆனால், ராஜஸ்தானில் நடந்த சம்பவம் ஒன்று, இது அனைத்திலிருந்தும் வேறுபட்ட ஒன்றாக பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கரௌலி மாவட்டத்தில் பதிவாகியுள்ள சம்பவம்தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிச்சயத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டநிலையில், இறுதியில் மாப்பிள்ளை வீட்டார் நிச்சயத்தை நிறுத்தியுள்ளனர். இதனால், இரு குடும்பத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
முற்றிய வாக்குவாதம் ஒரு கட்டத்தில் சண்டையாக மாற, ஆத்திரமடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளையின் சகோதரனை பிடித்து அவரது மீசையை வெட்ட ஆரம்பித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள், எவ்வளவுதூரம் தடுத்தும் அவர்கள் விடுவதாக இல்லை.
இந்த வீடியோ வைரலான நிலையில், இதுதொடர்பாக மற்றொரு வீடியோவை வெளியிட்ட மணமகன், "நிச்சயதார்த்தம் நின்றதில் எங்களது தவறு எதுவும் இல்லை , பெண் பார்க்கும்போது கொடுத்த புகைப்படம் வேறாகவும், நிச்சயத்தில் இருந்த பெண் வேறாகவும் இருந்தது.
இந்த ஏமாற்றத்தை எங்களால் தாங்க முடியவில்லை. இதன் காரணமாகவே சிறிது அவகாசம் தேவை என்று கூறினோம். எங்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
இதன்பிறகு, காவல்துறையினரிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர் மாப்பிள்ளை வீட்டார். இதுகுறித்து நடவுட்டி காவல் நிலையப் பொறுப்பாளர் மகேந்திர குமார் கூறுகையில், ’இரு தரப்பினரிடமும் முறையான புகார் எதுவும் இதுவரை வரவில்லை. தற்போது, போலீசார் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.’ என்று தெரிவித்துள்ளார்.