புதுச்சேரி: கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்... பொறுப்பாக சொன்ன காரணம்!
செய்தியாளர்: ஸ்ரீதர்
சென்னை மற்றும் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்ற ஆழ்கடல் பயிற்சி நிறுவனம் நடத்தி வருபவர் அரவிந்த் தருண்ஸ்ரீ. இவரது தங்கையான தீபிகா என்பவர் ஆழ்கடல் பயிற்சியாளராக உள்ளார். சுத்தமான காற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாரா க்ளேடிங் செய்து இவர்கள் தங்கள் காதலை கடந்த காலங்களில் வெளிப்படுத்தினர். இந்நிலையில், கடல் மாசுபாட்டில் இருந்து கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் நீருக்கடியில் தற்போது இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.
தீபிகா மற்றும் ஜான் டி பிரிட்டோ ஆகியோர் கடந்த ஓராண்டாக காதலித்து வந்த நிலையில், புதுச்சேரி கடல் பகுதியில் 5 கிலோமீட்டர் தூரத்தில் 50 அடி ஆழத்தில் திருமண கோலத்தில் இருவரும் இன்று மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறிய போது, “கடல் பாதுகாப்பு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். கடல் வாழ் உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்க கடல் மாசுபாட்டை தடுக்க வலியுறுத்தும் வகையிலும், காற்று மாசுபாட்டை தடுக்கும் நோக்கத்திலும் ஆழ்கடல் பயிற்சியாளர்களான நாங்கள் இப்படி திருமணம் செய்துகொண்டோம். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என தெரிவித்தனர்.