"அக்பர் - ஜோதா பாய் திருமணம் ஒரு கட்டுக்கதை" | ராஜஸ்தான் ஆளுநர் சொன்ன விளக்கம்!
”முகலாயப் பேரரசர் அக்பருக்கும் ராஜபுத்திர இளவரசி ஜோதா பாய்க்கும் இடையிலான திருமணம் ஒரு கட்டுக்கதை” என ராஜஸ்தான் மாநில ஆளுநர் ஹரிபாவு பாகடே தெரிவித்துள்ளார்.
உதய்பூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய அவர், ”ஜோதாவும் அக்பரும் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கதையைப் பற்றி ஒரு படமும் எடுக்கப்பட்டது. வரலாற்றுப் புத்தகங்கள் அதையே கூறுகின்றன. ஆனால் அது ஒரு பொய்... பர்மல் என்ற ஒரு மன்னர் இருந்தார், அவர் ஒரு வேலைக்காரியின் மகளை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். அக்பரின் ஆட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான, ’அக்பர்நாமா’வில் ஜோதா மற்றும் அக்பரின் திருமணம் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆங்கிலேயர்கள் நமது நாயகர்களின் வரலாற்றை மாற்றினர். அவர்கள் அதை முறையாக எழுதவில்லை. அவர்களின் வரலாற்றின் பதிப்பு ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பின்னர், சில இந்தியர்கள் வரலாற்றை எழுதினார்கள். ஆனால் அது இன்னும் ஆங்கிலேயர்களால் பாதிக்கப்பட்டது” என்றவர், ”ராஜபுத்திர ஆட்சியாளர் மகாராணா பிரதாப் அக்பருக்கு ஓர் ஒப்பந்தக் கடிதத்தை எழுதினார்” என்ற வரலாற்றுக் கூற்றையும் அவர் மறுத்தார். ”அது முற்றிலும் தவறானது. மகாராணா பிரதாப் தனது சுயமரியாதையை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. வரலாற்றில், அக்பரைப் பற்றி அதிகமாகவும், மகாராணா பிரதாப்பைப் பற்றி குறைவாகவும் கற்பிக்கப்படுகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கையின்கீழ், நமது கலாசாரத்தையும் புகழ்பெற்ற வரலாற்றையும் பாதுகாக்கும் அதே வேளையில், எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறையை தயார்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.