”அக்பர், சீதா பெயரை மாத்துங்க; இனிமே பூங்கா சிங்கங்களுக்கு இப்படி வைக்காதீங்க” - கொல்கத்தா ஹைகோர்ட்

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்ட சிங்கங்களுக்கு பெயர்களை மாற்ற வேண்டும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிலிகுரி பூங்கா, கொல்கத்தா உயர்நீதிமன்றம்
சிலிகுரி பூங்கா, கொல்கத்தா உயர்நீதிமன்றம்ட்விட்டர்

மற்ற மாநில உயிரியல் பூங்காக்களில் இருந்து விலங்குகளைக் கொண்டுவந்து வேறொரு பூங்காக்களில் வளர்ப்பது வாடிக்கை. இதன்மூலம், வனவிலங்குகளுக்கான இனப்பெருக்க திட்டம் வெற்றிகரமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திரிபுரா மாநிலத்தில் செபாஜிலா என்ற உயிரியல் பூங்கா உள்ளது.

இந்தப் பூங்காவில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரி சபாரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டுசெல்லப்பட்டன. இதில் 7 வயதுள்ள ஆண் சிங்கத்திற்கு ’அக்பர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு 6 வயதான பெண் சிங்கத்திற்கு ‘சீதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த இரு சிங்கங்களையும் ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கொல்கத்தா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிங்கங்களுக்குச் சூட்டப்பட்டிருந்த இந்த இருபெயர்களும் பழைய பூங்காவிலேயே சூட்டப்பட்டது ஆகும். மேற்கு வங்க பூங்காவுக்கு வந்தபிறகு அவைகளுக்கு பெயர் மாற்றப்படவில்லை என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்துத்தான் இந்த வழக்குப் போடப்பட்டது.

விஷ்வ ஹிந்து பரிஷத் தாக்கல் செய்த மனுவில், ’மாநிலத்தின் வனத்துறை சிங்கங்களுக்கு பெயர்களை வழங்கி உள்ளது. அதில் 'அக்பர்' என்ற பெயர் உடன் 'சீதா'வை இணைத்தது இந்துக்களுக்கு அவமரியாதையாக கருதப்படுகிறது. அதனால், சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ’சீதா, அக்பர் சிங்கங்களின் பெயரை மாற்ற மேற்குவங்க அரசு மற்றும் பூங்கா நிர்காகத்திற்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்றம், ‘விலங்குகளுக்கு புதிதாக வைக்கப்பட உள்ள பெயர் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் மதப் போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை இனி விலங்குகளுக்கு வைக்க வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளது.

சிலிகுரி பூங்கா, கொல்கத்தா உயர்நீதிமன்றம்
’அக்பரும் சீதாவும் ஒரே இடத்திலா?’ - அதிர்ச்சியடைந்த விஷ்வ ஹிந்து அமைப்பு; கோர்ட்டில் வழக்கு!

மேற்குவங்க அரசுக்கு கேள்விகளை அடுக்கிய நீதிபதி!

தனி நிதிபதி சௌகதா பட்டாச்சார்யா, “ஒரு இந்து தெய்வம், முஸ்லீம் தீர்க்கதரிசி அல்லது கிறிஸ்தவ கடவுள் அல்லது சுதந்திர போராட்ட வீரர் அல்லது நோபல் பரிசு பெற்ற மக்களால் மதிக்கப்படும் யாருடைய பெயரையாவது சிங்கத்திற்கு வைப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேற்குவங்க அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல், திரிபுராவிலேயே சிங்கங்களுக்கு பெயர் வைக்கப்பட்டு விட்டதாகவும், சிங்கங்களின் பெயர்களை மாற்றி வைக்கும் யோசனையில் அரசும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

திரிபுராவில் கொடுக்கப்பட்ட பெயரை ஏன் நீங்கள் மாற்றவில்லை என்று நீதிபதி அவரிடம் கேள்வி எழுப்பினார். அது குறித்து நீதிபதி கூறுகையில், “நீங்கள் ஒரு மக்கள் நல அரசு. மதசார்பற்ற அரசு. நீங்கள் ஏன் சீதா, அக்பர் என்று சர்ச்சைக்குரிய வகையில் பெயர் வைக்க வேண்டும்? இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்கப்பட வேண்டும். சீதா என்ற பெயரை மட்டுமல்ல அக்பரையும் சிங்கத்திற்கு வைப்பதை நான் ஆதரிக்கவில்லை. அவர் திறமைமிக்க முகலாய பேரரசர். வெற்றிகரமான மதசார்பற்ற முகலாய பேரரசை நடத்தியவர். ஏற்கனவே பெயர் வைக்கப்பட்டாலும் அதனை நீக்க வேண்டும், தவிர்க்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com