Rajasthan Election | கெத்து காட்டும் காங்.. முந்த நினைக்கும் பாஜக! கையிலெடுத்த வியூகங்கள் என்ன?

ஐந்து மாநில தேர்தலில் 4 ஆவது மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தில் 25 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
ராஜஸ்தான் தேர்தல்
ராஜஸ்தான் தேர்தல்pt web

இறுதிப் போட்டிக்கு முந்தைய அரையிறுதிப்போட்டியின் பரபரப்புடன் காணப்படுகிறது ஐந்து மாநில தேர்தல் களம். மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் தேர்தல் களம்

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 5.25 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் 2.73 கோடி ஆண் வாக்காளர்களும், 2.52 கோடி பெண்வாக்காளர்களும் உள்ளனர். இதில் 51,033 வாக்காளர்கள் 80 வயதைக் கடந்தவர்கள்; 11,894 பேர் மாற்றுத்திறனாளிகள். மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 51,756 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனார் உயிரிழந்ததால் அத்தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 25 தொகுதிகள் எஸ்.சி. தொகுதிகள், 34 தொகுதிகள் எஸ்.டி. தொகுதிகள். எஞ்சியுள்ள 141 தொகுதிகள் பொதுத்தொகுதிகளாக உள்ளன.

அகில இந்திய காங்கிரஸ், பாஜக இரண்டு முக்கிய கட்சியாக இருந்தாலும், ராஷ்ட்ரிய லோக் தன்ட்ரிக், மாயாவதியின் பஹுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் ரேசில் இருக்கின்றன. மாநிலத்தில் ஆளும் அரசாக இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மத்தியில் ஆளும் அரசாக இருக்கும் பாஜாகவிற்கும் இடையே இருமுனைப் போட்டியாகவே ராஜஸ்தான் தேர்தல் பார்க்கப்பட்டுகிறது. இரு தேசிய கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்துவருகின்றனர்.

கடந்தாண்டுகளில் நடந்த தேர்தல் சொல்வதென்ன?

2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளைப் பெற்றிருந்தது. பாஜக 73 தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால் வாக்கு சதவீதம் வித்தியாசம் என்பதோ வெறும் 0.5% மட்டுமே. காங்கிரஸ் 39.8% வாக்குகளைப் பெற்றிருந்தது என்றால் பாஜக 39.3% வாக்குகளைப் பெற்றிருந்தது. பெரும்பான்மையை நிரூபிக்க 101 தொகுதிகள் வேண்டும் என்பதால் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது. பகுஜன் சமாஜ் அந்த தேர்தலில் 6 தொகுதிகளில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தானில் 1998 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கிட்டத்தட்ட 153 தொகுதிகளை வென்றிருந்தது. பாஜக 33 தொகுதிகளை வென்றிருந்தது. காங்கிரஸ் 45%வாக்குகளையும் பாஜக 33.2% வாக்குகளையும் பெற்றிருந்தது. அதன் பின், 2003 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 120 தொகுதிகளிலும், காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. பாஜக முதன்முறையாக அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்தது.

2008 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 96 தொகுதிகளிலும் பாஜக 78 தொகுதிகளிலும் வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 36.8%, பாஜகவின் வாக்கு சதவீதம் 34.3%. 2013 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 163 தொகுதிகளை வென்ற பாஜக 46% வாக்குகளை பெற்றது. 21 தொகுதிகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ் 33.7% வாக்குகளைப் பெற்றது.

1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடந்த தேர்தல்களுக்குப் பின் நடந்த 4 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றால் கூட்டணித் துணை தேவையின்றி பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்பதும், காங்கிரஸ் கூட்டணித்துணையுடன் ஆட்சி அமைப்பதும் நடந்த வண்ணமே உள்ளது. இதை இப்படி வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம், பாஜகவின் வாக்கு வங்கி நிலையானஒன்று. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டுமானால் பாஜக ஆட்சியின் அதிருப்தி வாக்குகள் அவசியம் தேவை.

பாரதிய ஜனதா கட்சி

ராஜஸ்தான் மாநில பாஜகவைப் பொறுத்தவரை, பூத் அளவில் மிக வலுவான கட்சியாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள், கன்ஹயா லால் தேவி கொலை வழக்கு போன்ற விஷயங்களை தேர்தல் பிரசாரத்தில் மிக முக்கியமான ஒன்றாக பாஜக பயன்படுத்துகிறது. தற்போதைய ஆட்சியின் மீதான அதிருப்தி வாக்குகள், ஒவ்வொரு தேர்தலிலும் மாறும் அரசு போன்றவை பாஜகவிற்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்தித்து வருகிறது. அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. முன்னாள் முதல்வரும் அக்கட்சியின் மாநில தலைவருமான வசுந்தரா ரஜே மற்றும் அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான தியா குமாரி இடையே நீடிக்கும் பிரச்சனையே முதல்வர் வேட்பாளரை அறிவிக்காததன் காரணம் என அம்மாநில அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயத்தில் இந்த தேர்தலில் வசுந்தர ரஜேவிற்கான முக்கியத்துவத்தை தேசியத் தலைமையே குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்த போதும் சில மாநிலங்களில் முதற்கட்ட வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்த பாஜக ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் தீவிரமாக ஆலோசித்த பின்பே அறிவித்தது. மத்திய பிரதேசத்தில் அமித்ஷா முன்னிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக, ராஜஸ்தானில் பிரதமர் மோடி தலைமையில் தேர்தலைச் சந்திக்கிறது. அதேசமயத்தில் பல மத்திய அமைச்சர்கள், பிற மாநில பாஜக முதல்வர்கள் என களத்தில் இறக்கியுள்ளது. இங்கு ஏற்படும் தோல்வி நாடாளுமன்றதேர்தலிலும் எதிரொலிக்கும் அபாயம் உள்ளதால் ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்கிறது பாஜக. தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழு என ஒவ்வொன்றிற்கும் மத்திய அமைச்சர்களையும், பாஜக மூத்த தலைவர்களையும் களத்தில் இறக்கியுள்ளது பாஜக.

பாஜக தேர்தல் வாக்குறுதிகள்

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பொறுத்தவரை, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, தேர்வுத் தாள் கசிவு வழக்குகளை விசாரிப்பது போன்ற விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்டந்தோறும் மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்படும், மாவட்டந்தோறும் பெண்கள் பாதுகாப்பிற்காக Anti Romeo படைகள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாய உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.20000 கோடி ஒதுக்குதல், மூத்த குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1500 ஓய்வூதியம் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. மேலும் ரூ.450 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்., விவசாயிகளுக்கான உதவித்தொகை போன்ற வாக்குறுதிகளையும் பாஜக வழங்கியுள்ளது.

5 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, ஐந்து ஆண்டுகளில் 2,50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், காவல்துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு மழலையர் கல்வி முதல் முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி, 12 ஆம் வகுப்பு பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும்

கட்சியின் தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், மத்திய அமைச்சருமான அர்ஜூன்ராம் மேக்வால் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், “கட்சியின் நிகழ்ச்சிகளான ஆகன்ஷா பெட்டி, மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட ஒருகோடிக்கும் அதிகமான மக்களின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு பாஜகவின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

காங்கிரஸ்

பாஜகவின் இந்துத்துவ அரசியல் தற்போதைய அரசியல் சூழலில் ஆதிக்கம் செலுத்துவதால் காங்கிரஸ் கட்சியும் அதன்பாதையில் இறங்கியுள்ளது. அதேசமயம் தீவிரமாக இல்லாமல் soft hindutva எனும் பெயரில். ராஜஸ்தானில் முதலமைச்சர் அஷோக்கெலாட் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட பூங்காக்களுக்கு கெலாட் ‘லவ குஷ தோட்டங்கள்’ (lav kush vatika) என பெயரிட்டுள்ளார்.

அதேசமயத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றையும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அஷோக் கெலாட் செயல்படுத்தியுள்ளார். இந்தாண்டு ஜூலையில் அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி வருமான உறுதி திட்ட மசோதா 2023, ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்திய லோக் கலகர் ப்ரோத்சஹன் யோஜனா என பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இத்திட்டத்தின் படி 3000 நாட்டுபுற கலைஞர்களுக்கு இசைக்கருவிகளை வாங்குவதற்காக ரூ.5000 நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும். வருடத்தில் 100 நாட்கள் அரசு விழாக்களில் நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் வழங்கப்படும். நாட்டுப்புறக்கலைகளை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இம்மாதிரியான பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சச்சின் பைலட்டிற்கு இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு போன்றவை காங்கிரஸ் கட்சியை பாஜகவை விட ஓரடி முன்னே நிற்க வைக்கிறது. இருந்தபோதும் கட்சியில் அஷோக் கெலாட், சச்சின் பைலட் இடையே உள்ள மோதல் போக்கு அக்கட்சியின் தேசிய தலைமையின் முன் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

ஆனால் சமீப நாட்ளாக கெலாட், பைலட் இருவரும் இணைந்து பொதுவெளியில் தோன்றுகின்றனர். ராகுல் காந்தியின் முன்னெடுப்பே இதற்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையேயான மோதலின் போது தேசியத்தலைமை தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தது. அதேபோன்றதொரு பாணியை கெலாட் பைலட் இடையேயான மோதலிலும் தேசியத் தலைமை பயன்படுத்தியதால் தற்போதைக்கு இப்பிரச்சனை முடிவினை எட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி தனது மக்கள் நலத்திட்டங்களைக் முன்னிலைப்படுத்தி தேர்தலைச் சந்திக்கிறது. அதேபோல் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 10000 மதிப்பூதியம் போன்றவற்றிற்கு காங்கிரஸ் உத்தரவாதம் அளித்துள்ளது.

காங்கிரஸ் - 7 வாக்குறுதிகள்

காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக கூறி 7 வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது.

குடும்பத்தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் மதிப்பூதியம்

1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ. 500க்கு சிலிண்டர்

கௌதன் திட்டத்தின் கீழ் கால்நடைகளை வளர்ப்பவர்களிடமிருந்து ரூ.2க்கு சாணங்களை வாங்குதல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்

அரசுக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படுவது

சிரஞ்சீவி காப்பீட்டுத் திட்டத்தின் ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தப்படுவது

இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்பீடுகளை ஈடு செய்ய குடும்பத்திற்கு ரூ.15 வரை இழப்பீடு போன்ற பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. .

மக்கள் நலத்திட்டங்களின் மூலம் காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருந்தாலும் கட்சியின் உட்கட்டமைப்பு, மக்களிடம் செல்வாக்கு, அதிருப்தி போன்றவற்றின் மூலம் பாஜக தேர்தலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com