மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்கூகுள்

ராஜஸ்தான் | வாய் பேசமுடியாத, காது கேட்காத 11 வயது சிறுமிக்கு தீ.. 10 நாள் சிகிச்சைக்குப் பின் சோகம்!

ராஜஸ்தான் கரௌலியைச் சேர்ந்த 11 வயது கொண்ட காது கேட்காத வாய் பேசமுடியாத சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கருகே உடலில் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். என்ன நடந்தது? பார்க்கலாம்...

கடந்த 10ம் தேதியளவில் ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் பழங்குடி இனத்தவர்கள் வாழும் பகுதியில் வசித்து வந்த காது கேட்காத, வாய் பேசமுடியாத 11 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதைக்கேட்ட அவரது தாயார் வீட்டிற்கு வெளியே ஓடிவந்து பார்க்கையில், நூறடி தூரத்தில் இருக்கும் பண்ணையில் உடல் முழுதும் எரிந்த நிலையில் சிறுமி இருந்துள்ளார். இதைக் கண்டதும் அந்த தாய் அலறி உள்ளார். விவரத்தை தெரிந்துக்கொண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அச்சிறுமியை மீட்டு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விசாரணையில், தன்மீது யாரோ இருவர் தீவைத்துவிட்டு தப்பி சென்றதாக அச்சிறுமி தன் தாயாரிடம் சைகையின் மூலம் தெரிவித்துள்ளார். சிறுமியின் சைகையை வாக்குமூலமாக கடந்த மே 14ம் தேதி எடுத்துக்கொண்ட போலீசார் வழக்கை பதிவு செய்து குற்றவாளி யார் என்ற விசாரணையில் இறங்கினர்.

முன்னதாக அச்சிறுமியிடம் சந்தேகிக்கப்பட்ட நபர்களின் புகைப்படங்களை காட்டியதில், அச்சிறுமி ஒருவரை அடையாளம் காட்டி இருக்கிறார். இருந்தபோதிலும் தற்போதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றே தெரிகிறது.

சைகையில் சிறுமி குற்றவாளியை அடையாளம் காட்டிய வீடியோ, இணையத்தில் அதிகம் பரப்பப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அச்சிறுமி நேற்று முன்தினம் (மே 20) சிகிச்சை பலனின்றி இறந்தார். பத்து நாட்கள் போராடிய அச்சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாக்கப்பட்டிருப்பதாக சில உள்ளூர் ஊடகங்களிடம் அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் காவல்துறை இதுபற்றி தெரிவித்ததாக தகவல் இல்லை.

மாதிரி புகைப்படம்
திருச்சூர்: செவிலியரின் அலட்சியத்தால் நடக்கமுடியாமல் போன குழந்தை; நீதி கேட்கும் தந்தை

இந்நிலையில், இறந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க நாள் ஆகிறது என்றும், அவரது இறப்பில் சில சந்தேகங்கள் இருக்கிறது என்றும் கூறி சமூக ஊடகங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். இது குறித்து பேசியுள்ள போலீசார், “இறந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கவே நாங்களும் போராடுகிறோம். நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளனர். மேலும் சரிபார்க்கப்படாத உரிமை கோரல்களை பரப்ப வேண்டாம் என்று சமூக ஊடகங்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.

சிறுமியின் தோல் மற்றும் ஆடைகளின் மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், நிபுணர்களின் ஆலோசனைப்படி விசாரணை விரைவில் தொடங்கும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com