‘எனக்கு பிடித்த நடிகர் மோடி’ - ராஜஸ்தான் முதல்வர் பேச்சு குறித்து காங். விமர்சனமும் பாஜக விளக்கமும்
ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, பிரதமர் நரேந்திர மோடியை தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியதாக சர்ச்சை ஆகியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்தவரான சர்மா, திரைப்பட விருது விழா ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்வில் முதல்வர் பேசும் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ், ”மோடி ஒரு தலைவர் அல்ல நடிகர்தான் என்று நாங்கள் நீண்டகாலமாகக் கூறிவருவதை ராஜஸ்தான் முதல்வர் உறுதிப்படுத்திவிட்டார்” என்று கூறியுள்ளது. ஆனால் சர்மா, மோடியை நடிகர் என்று குறிப்பிடவில்லை என்று பாஜக விளக்கம் அளித்துள்ளது.
நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்த நாயகன் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு ’பிரதமர் மோடிதான் எனக்கு மிகவும் பிடித்த நாயகன்’ என்று முதல்வர் சர்மா கூறியதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பேசியதை காங்கிரஸ் வேண்டுமென்றே திரிப்பதாகவும், அதற்கேற்ற வகையில் முதல்வர் பேசும் காணொளியில் மாற்றங்களைச் செய்து வெளியிட்டிருப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.