ராகுல் காந்தி, அத்வானிக்கு அழைப்பு: மகன் திருமணத்துக்கு மோடியை அழைக்காத ராஜ் தாக்கரே!
தனது மகனின் திருமணத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோரை அழைத்துள்ள ராஜ் தாக்கரே, பிரதமர் மோடியை அழைக்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே. இவரது மகன் அமித்துக்கும் மும்பையை சேர்ந்த பிரபல டாக்டர் சஞ்சய் பருடேவின் மகள் மித்தாலிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணம் வரும் 27 ஆம் தேதி மும்பை லோவர் பரேலில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. இதற்காக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ள ராஜ் தாக்கரே, பிரதமர் மோடி யை இன்னும் அழைக்கவில்லை என்று இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரம், சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்காரி, தர்மேந்திர பிரதான், மேனகா காந்தி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
(அமித் தாக்கரே, மித்தாலி)
முன்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘’மகன் திருமணத்துக்கு பிரதமர் மோடியை அழைப்பீர்களா? என்று கேட்டபோது, ‘’அவருக்கு திருமண அமைப்பின் மீதெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?’’ என்று கேட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக இருந்த ராஜ் தாக்கரே, பின்னர் அவரது எதிர்பாளராக மாறிவிட்டார். இப்போது அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.