"என் ரத்தம் கொதிக்கிறது" - டிக்கெட் இருந்தும் தாக்கப்பட்ட ரயில் பயணி

இந்திய ரயில்வே டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பயணி ஒருவரை கண்ணத்தில் அறைந்த வீடியோ வைரலானதை அடுத்து டிக்கெட் பரிசோதகர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வைரலான வீடியோ
வைரலான வீடியோpt web

பராவ்னி - லக்னோ எக்ஸ்பிரஸில் பயணி ஒருவரை அறைந்த டிக்கெட் பரிசோதகர் தற்போது பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வைரல் வீடியோ குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், “இதுபோன்ற தவறான நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்யசபா எம்.பி.யும் முன்னாள் மகளிர் ஆணைய தலைவருமான ஸ்வாதி மாலிவால், நாம் எவ்வளவுதான் வந்தே பாரத்தை கொண்டாடினாலும், நாட்டின் ஏழை மக்கள் வசதியாகவும் கண்ணியமாகவும் பயணம் செய்யும்போதுதான் இந்திய ரயில்வே மேம்படும். இந்த காணொளியைப் பார்க்கும்போது ரத்தம் கொதிக்கிறது. மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

லக்னோ கோட்ட மண்டல ரயில்வே மேலாளர் இதுகுறித்து கூறுகையில், டிக்கெட் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். விசாரணையில், டிக்கெட் பரிசோதகர் பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணியின் பெயர் நீரஜ்குமார் என செய்தியாளர் ஆதர்ஷ் மோகன் என்பவர் தனது எக்ஸ்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஆதர்ஷ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய ரயில்வேயில் குண்டர்கள் டிடி என்ற போர்வையில் சுற்றித் திரிகிறார்கள். நீரஜ் குமாரிடம் ரயில் எண் 15203 இன் S6-இல் டிக்கெட் கூட உள்ளது, ஆனால் அவர் அவரிடம் தவறாக நடந்து கொள்ளத் தொடங்கினார், சிறிது நேரத்தில் அவரை தாக்கத் தொடங்கினார். நீரஜ்க்கு நீதி கிடைக்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில், பயணியை டிக்கெட் பரிசோதகர் சரமாரியாக தாக்குவதும் அவரை எழுந்துகொள்ளச் செய்வதுமான காட்சிகள் பதிவாகியுள்ளன. வீடியோவில் மேலிருந்து இந்தக் காட்சியை படம் பிடிக்க, டிக்கெட் பரிசோதகரோ வீடியோ எடுத்தவரைப் பார்த்து இந்தியில் ஏதோ பேசுகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து டிக்கெட் பரிசோதகர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயணி தாக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com