
நியூயார்க் நகரில் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேடிசன் ஸ்கொயர் கார்டன் என அழைக்கப்படும் இடத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவில் வசிக்கும் 5,000 இந்திய வம்சாவளி மக்கள் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் பதவி பறிபோன பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி அமெரிக்கா செல்வது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்கை தவிர அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மற்றும் கலிஃபோர்னியா ஆகிய நகரங்களுக்கும் ராகுல் காந்தி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா பயணத்தின்போது பல அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்களை ராகுல் காந்தி சந்திப்பார் எனவும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் உரை நிகழ்த்துவார் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்பு ராகுல் காந்தி லண்டன் சென்றபோது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரை சர்ச்சையானது. இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் காந்தி லண்டனில் உரை நிகழ்த்தினார் என குற்றம் சாட்டி பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்தினர்.
மற்றொருபுறம், அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்கா பயணம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். பிரதமர் மோடி ஜூன் மாதம் 22 ஆம் தேதி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார்.