”ஆதாரமற்ற பேச்சு..” மறைமுகமாக தாக்கி பேசிய ஓம் பிர்லா.. கேள்வி எழுப்பிய ராகுல்.. நடந்தது என்ன?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “மக்களவை உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பல்வேறு புகார்கள் என் கவனத்திற்கு வந்துள்ளன. உறுப்பினர்கள் அவையின் மாண்பு மற்றும் கண்ணியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அவையில் தந்தை - மகள், தாய் - மகள், கணவன் - மனைவி என பல்வேறு தரப்பினரும் உறுப்பினராக இருக்கின்றபோது, உறுப்பினர்களுக்கான நடத்தை விதி 349-ன்படி எதிர்க்கட்சித் தலைவர் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் எழுந்து பேச முயன்றார். ஆனால் அதற்குள் சபாநாயகர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். மேலும் இதற்கான காரணம் என்ன என்பதையும் அவர் கூறாமல் சென்றிருந்தார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “இங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பேச அனுதிக்குமாறு நான் அவருக்கு கோரிக்கை வைத்தேன். ஆனால் அவர் (சபாநாயகர்) வெளியேறிச் சென்றுவிட்டார். அவையை நடத்துவதற்கான வழி இது இல்லை. சபாநாயகர் என்னைப் பேச விடாமல் வெளியேறிவிட்டார்.
அவர் என்னைப் பற்றி ஆதாரமற்ற ஒன்றைச் சொன்னார். அவர் அவையை ஒத்திவைத்தார். அதற்கான தேவையில்லை. மக்களவை எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பது மரபு. நான் பேச எழும்போது எல்லாம், பேச விடாமல் தடுக்கப்பட்டேன். நான் எதுவும் செய்யவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தேன். இங்கு ஜனநாயகத்துக்கே இடம் இல்லை. நான் மகா கும்பமேளா பற்றி பேச விரும்பினேன், அதேபோல் வேலைவாய்ப்பின்மை பற்றியும் பேச விரும்பினேன். ஆனால் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
சபாநாயகரின் இந்தக் கண்டிப்பிற்கும், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்குப் பின்னால் இருப்பதும் பாஜக தலைவர் அமித் மாளவியா பகிர்ந்த காணொளியே. கடந்த மார்ச் 18 அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் பழைய காணொளிக் காட்சி ஒன்றை பாஜக தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில், ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியின் கன்னத்தை அன்புடன் தொடுவது பற்றி கூறியிருந்தார். மேலும், இந்த தருணத்தை பொருத்தமற்றது என்று மாளவியா தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்தே இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கத் தொடங்கியது.
தற்போது இவ்விவகாரம் குறித்து பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதோரா ஏ.என்.ஐக்கு அளித்துள்ள பேட்டியில், “ராகுல் சாதாரண மக்களின் குரல். ராகுலும் பிரியங்காவும் ஒரு வலுவான பிணைப்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அங்கு, ஒரு சகோதரர் தனது சகோதரியை பாசத்துடன் வரவேற்கிறார். எங்கள் குடும்ப உறுப்பினர்கள், பெண்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை நாங்கள் கற்றுக் கொண்டுள்ளோம். எங்கள் உறவுகளைப் பேணுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். ராகுலின் தரப்பைக் கேட்காமல் சபாநாயகர் சபையை ஒத்திவைத்தது சரியல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே, "ஓம் பிர்லா, பாஜக எம்.பி. ஒருவர் முஸ்லிம் எம்.பி.யைத் தாக்கி, அவையில் அவரை ’கட்டா’ & ’ஆதங்கவாதி’ என்று அழைத்தபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனத் தெரிவித்தார்.