\
Nirmala Sitharaman's response
Charges for UPI transactionsPt web

UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா? உச்சகட்ட அதிர்ச்சியில் பொதுமக்கள்... நிர்மலா சீதாராமனின் பதில் என்ன ?

UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
Published on

இந்தியாவின் பணப் பரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளை கடந்த 2008-ம் ஆண்டு இந்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து தொடங்கின. தொடர்ந்து 2012-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி, இந்தியாவில் பணமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தை வெளியிட்டது.

இந்த திட்டத்தின் அடுத்தகட்டமாக 2016-ம் ஆண்டு 21 வங்கிகளின் சேவையோடு முதல்முறையாக UPI முறையை அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தொடங்கி வைத்தார். இந்த சூழலில் 2016 இறுதியில் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetization) காரணமாக, மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கினர்.

அதோடு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு UPI பரிவர்த்தனைக்கான MDR எனப்படும் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதன் காரணமாக UPI பயன்பாடு பொதுமக்கள் இடையே அதிவேகமாக அதிகரித்து, தற்போது மொத்த பண பரிவர்த்தனையில் 9.5% UPI மூலமே நடைபெறுகிறது. அதோடு இந்தியாவின் சில்லறை வர்த்தகத்தில் மொத்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் 85.5% UPI மூலமாகவே நடைபெறுகிறது.

இந்த அளவு மக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில, UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மின்னணுப் பணப்பரிவர்த்தனை மீது வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் MDR கட்டணத்தை வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனை முன்வைத்து பொதுமக்கள் 2000 ரூபாய்க்கு மேலான UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், MDR எனப்படும் வர்த்தக கட்டணம் என்பது பெரு வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்களுக்கு இது பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆண்டுக்கு 1.5 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் வணிகர்களுக்கு மட்டுமே தற்போது மத்திய அரசு MDR கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதே நேரம் வணிகர்களுக்கு இந்த கட்டணத்தை வசூல் செய்தால் அதற்கான தொகையை அவர்கள் பொதுமக்கள் மீதே திணிப்பார்கள் என்றும் இதனால் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.

Nirmala Sitharaman's response
பொதுத்தேர்தலில் வெற்றி; இடைத்தேர்தலில் தோல்வி.. வேண்டுமென்றே தோற்கும் பாஜக.. அகிலேஷ் விமர்சனம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com