’இறந்தவர்களோடு தேநீர் அருந்த வாய்ப்பளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி..’ ராகுல் காந்தி கிண்டல் பதிவு!
சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அண்மையில் சுமத்தினார்.
மகாராஷ்ட்ரா, ஹரியானாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களிலும், கர்நாடக பேரவைத் தேர்தலிலும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றதாக அவர் குற்றஞ்சாட்டினார். இயந்திரம் மூலம் படிக்கக் கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சில தரவுகளுடன் முன்வைத்த ராகுல் காந்தி, பாஜகவுக்காக தேர்தல் ஆணையம் வாக்குத்திருட்டில் ஈடுபட்டது என்ற அணுகுண்டையும் தூக்கிப் போட்டார்.
ராகுல் காந்தி கிண்டல் பதிவு..
ராகுலின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த தேர்தல் ஆணையம், குற்றச்சாட்டுகள் இருப்பின் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு ராகுல் காந்தி வழங்க வேண்டும் என தெரிவித்தது. இதற்கான விளைவுகளை ராகுல் எதிர்கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இறந்ததாக கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் சிலருடன் கலந்துரையாடும் வீடியோவை ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தமக்கு மட்டுமே கிடைத்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். இப்படியொரு தனித்துவமான வாய்ப்பை வழங்கிய தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இருப்பவர்களை இறந்ததாகவும், இறந்தவர்களை இருப்பதாகவும் காட்டி வாக்காளர் பட்டியல் சீர்த்திருந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், ராகுலின் வீடியோ புதிய புயலை கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பதிலையும், உண்மை என்ன என்பதையும் அறிய தேசம் காத்திருக்கிறது.