"பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை" - ராகுல் காந்தி விமர்சனம்!
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. அதேசமயம், உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருவதனால் உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகமாகி பொருளாதார சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் நாட்டின் நலன் கருதி பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எண்ணெய் பயன்பாட்டை பொதுமக்கள் குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியர்களுக்கு பெரும் சுயக்கட்டுப்பாடு அவசியம் என்றும் எரிபொருளை சேமிப்பதற்காக அலுவலகப் பணிகளுக்குப் பயணம் செய்வதைக் குறைக்கும் வகையில், மீண்டும் "வீட்டிலிருந்தே வேலை" செய்யும் முறையைப் பின்பற்றுமாறு நிறுவனங்களையும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் தான், பிரதமர் மோடியின் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மோடி பொதுமக்களிடம் சில தியாகங்களை செய்ய கூறியுள்ளார் - தங்கம் வாங்காதீர்கள், வெளிநாடு செல்லாதீர்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறையுங்கள், உரம் மற்றும் சமையல் எண்ணெயைக் குறைத்துக் கொள்ளுங்கள், மெட்ரோவில் பயணம் செய்யுங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இவையெல்லாம் அறிவுரைகள் அல்ல; இவை தோல்விக்கான ஆதாரங்கள் என்றும் 12 ஆண்டுகளில், அவர் நாட்டை எந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளார் என்றால், எதை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது, எங்கே செல்ல வேண்டும், எங்கே செல்லக் கூடாது என்று பொதுமக்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும், தாங்கள் பொறுப்பேற்பதிலிருந்து தப்பித்துக்கொள்ள மக்கள் மீது எல்லாவற்றையும் சுமத்துகிறார்கள். பிரதமருக்கு நாட்டை நிர்வகிக்கும் திறன் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

