“வேலை வாய்ப்பின்மை – வாக்குத் திருட்டு ஒன்றுக்கொன்று தொடர்புடையது” – ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், இந்தியாவில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை வேலைவாய்ப்பின்மை என்றும், இது நேரடியாக ’வாக்குத் திருட்டுடன்’ தொடர்புடையது என்றும் தெரிவித்திருக்கிறார். ஓர் அரசு மக்கள் நம்பிக்கையை வென்று ஆட்சிக்கு வரும்போது, அதன் முதன்மையான கடமை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது என்றும் ராகுல் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், பாஜக தேர்தல்களை நேர்மையாக வெல்லவில்லை – வாக்குகளைத் திருடி, நிறுவனங்களைக் கட்டுப்படுத்தி அதிகாரத்தில் நிலைத்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருக்கிறார். அதனால்தான் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியிருக்கிறது. வேலைகள் குறைந்து, ஆட்சேர்ப்பு செயல்முறைகள் சரிந்து, இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது எனவும் ராகுல் விமர்சித்திருக்கிறார்.
"இந்தியாவின் இளைஞர்கள் கடுமையாக உழைக்கின்றனர், கனவு காண்கின்றனர், எதிர்காலத்திற்காக போராடுகின்றனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தனது மக்கள் தொடர்பு, பிரபலங்கள் அவரைப் புகழ வைப்பது மற்றும் கோடீஸ்வரர்களின் லாபம் ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்து அவர்களை விரக்தி அடையச் செய்வது அரசின் அடையாளமாகிவிட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.
இப்போது, நிலைமை மாறிவருகிறது. உண்மையான போராட்டம் வேலைவாய்ப்புகளுக்காக மட்டுமல்ல, வாக்குத் திருட்டுக்கு எதிரானது என்பதை இந்தியாவின் இளைஞர்கள் புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால், தேர்தல்கள் திருடப்படும் வரை, வேலையின்மை மற்றும் ஊழல் தொடர்ந்து உயரும்" என்று அவர் கூறினார். "உண்மையான தேசபக்தி இப்போது வேலைவாய்ப்பின்மை மற்றும் வாக்குத்திருட்டில் இருந்து இந்தியாவை விடுவிப்பதில் இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.