Movie Reviews
Movie ReviewsVadivelu, Dhanush

"விமர்சனங்களை நம்பாதீர்கள்" திரை விமர்சனம் குறித்து தனுஷ், வடிவேலு கூறியது என்ன?| Dhanush | Vadivelu

படத்தை பார்த்து முடிவு எடுங்கள் அல்லது படம் பார்த்த உங்கள் நண்பர்கள் சொல்வதை வைத்து முடிவு எடுங்கள். சினிமாவுக்கு அது மிகவும் தேவை. சினிமா ஆரோக்யமாக இருக்க வேண்டும். எல்லோரின் படமும் ஓட வேண்டும்.
Published on

திரைப்பட விமர்சனம் ஒரு பெரிய சிக்கல் என சினிமா துறை சார்ந்த பலரும் தொடர்ந்து பல இடங்களில் தெரிவித்து வருகின்றனர். திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூட திரையரங்க வளாகத்திற்குள் விமர்சனம் எடுக்க அனுமதிக்காதீர்கள் என சொன்னார். மேலும் பல பிரபலங்கள் முதல் மூன்று நாட்கள் விமர்சனங்களை வெளியிடாதீர்கள் எனக் கூறினர். அதன் தொடர்ச்சியாக தனுஷ், வடிவேலுவும் திரைப்பட விமர்சனங்கள் குறித்த தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமை (செப் 20) கோயம்புத்தூரில் `இட்லி கடை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய தனுஷ் திரைப்பட விமர்சனங்கள் பற்றி கூறிய போது "என்னுடைய ரசிகர்கள் யார் வம்புக்கும் போக மாட்டார்கள். அதில் எனக்கு பெரிய கர்வமும், சந்தோஷமும் இருக்கிறது. இந்த இட்லி கடை மிக எளிமையான, சாதாரணமான படம். ஆனால் உங்கள் குடும்பத்துடன் போய் ரசித்து மகிழும் படமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

அதே போல படம் வெளியான பின், 9 மணிக்கு படம் என்றால் 8 மணிக்கே சில ரிவ்யூ வரும் அவற்றை நம்பாதீர்கள். 9 மணிக்கு படம் வெளியானால் 12.30 மணிக்கு தான் படம் எப்படி இருக்கிறது என்றே தெரியும். அதற்கு முன்னாடியே பல விமர்சனங்கள் வரும். அதை நம்பாதீர்கள். படத்தை பார்த்து முடிவு எடுங்கள் அல்லது படம் பார்த்த உங்கள் நண்பர்கள் சொல்வதை வைத்து முடிவு எடுங்கள். சினிமாவுக்கு அது மிகவும் தேவை. சினிமா ஆரோக்யமாக இருக்க வேண்டும். எல்லோரின் படமும் ஓட வேண்டும். எல்லா தயாரிப்பாளரும் நன்றாக இருக்க வேண்டும். நிறைய தொழில் சினிமாவை நம்பி நடக்கிறது. எனவே எல்லா படமும் ஓடுவது ரொம்ப முக்கியம். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. அதனால் சரியான விமர்சனங்களை பார்த்து நீங்கள் முடிவு எடுங்கள் என்பது என்னுடைய வேண்டுகோள்." எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து சென்னையில் கடந்த ஞாயிற்றுகிழமை (செப் 21) நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய நடிகர் வடிவேலு, ”திரைப்பட விமர்சனம் என்ற பெயரில் 10 பேர் ஒட்டுமொத்தமாக சினிமாவையே அழித்து வருகின்றனர். சில யூடியூபர்களை போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லாமல் செய்ய வேண்டும்; சில நடிகர்கள் தங்களின் படம் நன்றாக ஓட வேண்டும் என அவர்களின் போட்டி நடிகர்களின் படத்திற்கு யூட்யூபர்கள் மூலம் எதிர்மறையான விமர்சனங்களைத் தர வைத்து தோல்வியடையச் செய்கிறார்கள்” என்ற கருத்தை முன் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்த போது, வடிவேலு முன்வைத்த கருத்து கேள்வியாக எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் "வடிவேலு அண்ணன் சக நடிகர், நடிகை பாதிக்கப்பட்டதற்காக பேசி இருக்கிறார். இப்போது இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருப்பவர்தான் அடுத்த வீடியோவை போடுவார். அவரை திருத்த முடியாதது. நாங்கள் உழைத்து சம்பாதிக்கிறோம். அவர் எங்களை பற்றி பேசி சம்பாதிக்கிறார்." எனத் தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய நாசர் "விமர்சனங்கள் அவசியமானது, அதுதான் கலைஞர்களை வளரவைக்கும். ஆனால் மூன்றாந்தரமாக விமர்சனங்கள் வளர்வதுதான் வருத்தமாக இருக்கிறது. படத்தைப் பற்றி குறைகள் சொல்லுங்கள், ஆனால் அந்த கலைஞரின் தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசாதீர்கள். அறிவுப்பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன." என்றார். விமர்சனங்கள் குறித்து முன்னனி நடிகர்கள் தற்போது வைத்துள்ள கருத்துக்கள் பரவலாக பேசப்படும் ஒன்றாக மாறி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com