வாக்கு திருட்டு.. மீண்டும் குற்றஞ்சாட்டிய ராகுல்.. மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம்!
வாக்கு திருட்டு விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகளை தாங்கள் கண்டறிந்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் குற்றச்சாட்டு
வாக்கு திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் அடங்கிய, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அந்த தொகுதியில் மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், அதில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், ஒரே முகவரியில் பல பேர் வசிப்பதாகவும் அதிலும் குறிப்பாக, ஒரேவீட்டில் 80 வாக்காளர்கள் இருந்ததாகவும் Form 6 படிவத்தை சுமார் 33 ஆயிரத்து 692 வாக்காளர்கள் தவறாக பயன்படுத்தியிருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
ஆனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ராகுலின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்திருந்தது. ஆனால், இதுகுறித்து உண்மையை நிரூபிக்கும் பணியில் களமிறங்கிய இந்திய டுடே ஊடகம், பெங்களூருவில் ஒரே வீட்டு முகவரியில் 80 பேர் பதிவு செய்திருந்ததை ஆதாரத்துடன் எடுத்துக் காட்டியது. இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளானது. எதிர்க்கட்சியினர் பலரும் இதுகுறித்து விமர்சித்தனர். உத்தரப் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கும் சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். மஹோபா மாவட்டத்தில், ஒரே வீட்டில் 4,271 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று ஹைட்ரஜன் குண்டை வீசப்போவதாக ராகுல் காந்தி முன்னரே தெரிவித்திருந்தார். இதையடுத்து எதிர்பார்ப்பு எழுந்தது. சொன்னபடி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்கு திருட்டு விவகாரத்தில் பல்வேறு முறைகேடுகளை தாங்கள் கண்டறிந்திருப்பதாக தெரிவித்தார்.
இன்றும் குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி
கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,018 வாக்குகள் நீக்கப்பட்டதாக அவர் ஆதாரத்துடன் கூறினார். யாரோ வேண்டுமென்றே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த வாக்குகள் நீக்கப்பட்டதாகவும், ஜனநாயகத்தை அழிப்பவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாகவும் வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் கட்சியின் வாய்ப்புகளைப் பலவீனப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும் தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை அழிப்பவர்களைக் காப்பாற்றுகிறது எனத் தெரிவித்த அவர், 100 சதவீத உண்மை மற்றும் ஆதாரத்தின் ஆதரவு இல்லாமல் எந்த அறிக்கையையும் வெளியிட மாட்டேன்” என்றார்.
தேர்தல் ஆணையம் மறுப்பு
ஆனால், ராகுலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது, “ராகுல் காந்தி தவறாக புரிந்துகொண்டுள்ளார்; அவர் சொல்வதுபோல எந்தவொரு வாக்காளரின் பெயரையும் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் யாரும் நீக்க முடியாது. 2023ஆம் ஆண்டில், ஆலந்த் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்க சிலர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதுதொடர்பாக, தேர்தல் ஆணையமே ஒரு FIR-ஐ பதிவு செய்து, விசாரணைக்கு உத்தரவிட்டது” என விளக்கமளித்துள்ளது.