பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. ”தேர்தலைப் புறக்கணிப்பது..” எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
பீகாரில், இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, ஜூலை 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 18 லட்சம் வாக்காளர்கள் இறந்ததும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 52 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், அதில் தகுதியுள்ள அனைவரும் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சட்டமன்ற தேர்தலைப் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சிறப்பு திருத்தப் பணி என்ற பெயரில், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகவும், போலியான பெயர்கள் சேர்க்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ”இது வெறும் 52 லட்சம் நபர்கள் பற்றியது கிடையாது. மகாராஷ்டிராவில் அவர்கள் ஏற்கெனவே மோசடி செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர் பட்டியலை கேட்டபோது அதனைக் கொடுக்க மறுத்துவிட்டார்கள். வீடியோ ஆதாரங்களைக் கேட்டபோது, வீடியோ பதிவு தொடர்பான சட்டத்தை மாற்றிவிட்டார்கள்.
1 கோடி வாக்காளர்கள் அங்கு சேர்க்கப்பட்டனர். கர்நாடகாவில் பெரும் திருட்டைக் கண்டுபிடித்துள்ளோம். அந்தத் திருட்டு எப்படி நடந்துள்ளது என்பதை கருப்பு வெள்ளையாக நான் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பேன். அவர்களின் விளையாட்டை, இப்போது நாங்கள் அறிந்திருக்கிறோம் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். தற்போது அவர்கள் வாக்காளர்களின் பெயர்களையே நீக்கி புது வாக்காளர் பட்டியலைக் கொண்டுவந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. முன்னதாக, 2003ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் தங்களது இந்திய குடியுரிமை மற்றும் இருப்பிடத்தை நிரூபிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் பீகாரில் வாக்காளர் திருத்தத்தின்போது ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் 88 பக்க பிரமாணப் பத்திரத்தை தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆதார், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை இந்தியக் குடியுரிமைக்கான ஆவணங்களாகக் கருத முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருக்கிறது.