முதல்வர் ராஜினாமா | ”பிரதமர் மணிப்பூர் மக்களை உடனே சந்திக்க வேண்டும்” - ராகுல்
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர்.
இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை பிரேன் சிங் அளித்த நிலையில், மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதலமைச்சர் பதவியில் தொடருமாறு பிரேன் சிங்கை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கின் ராஜினாமா குறித்து, வயநாடு தொகுதி எம்பி. பிரியங்கா காந்தி, “மணிப்பூர் முதல்வர் பதவியில் இருந்து பிரேன் சிங் வெகுநாட்களுக்கு முன்பே ராஜினாமா செய்திருக்க வேண்டும். மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை மட்டுமே தொடர்கிறது. இதற்கு முடிவுகள் இதுவரை எட்டப்படாமல், அங்கு மக்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இல்லை” கூறினார்.
இதுகுறித்து அவரது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “சுமார் 2 ஆண்டுகளாக பிரேன் சிங் மணிப்பூரில் பிரிவினையை தூண்டினார். மணிப்பூரில் வன்முறை, உயிரிழப்பு மற்றும் இந்தியா என்ற எண்ணம் அழிந்தபோதிலும், அவர் பதவியில் தொடர பிரதமர் மோடி அனுமதித்தார். தற்போது மாநிலத்தில் அமைதியை மீட்டெடுப்பது மிக முக்கியமானது. பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூருக்குச் சென்று, மக்களின் பேச்சை கேட்டு, இயல்பு நிலையை திரும்ப கொண்டு வருவதற்கான தனது திட்டத்தை விளக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.