ராமர் சிலை பிரதிஷ்டை: அழைப்பிதழ் நிராகரிப்பு.. மோடிக்கு எதிர்ப்பு.. அதிரடியில் பூரி சங்கராச்சாரியார்

அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வந்த அழைப்பிதழை, ஓடிசாவின் பூரி மடத்தின் சங்கராச்சாரியான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி நிராகரித்து இருப்பதாகக் கூறியுள்ளார்.
மோடி, பூரி சங்கராச்சாரியார்
மோடி, பூரி சங்கராச்சாரியார்ட்விட்டர்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பாபிஷேக விழாவில் 3 ஆயிரம் விஐபிக்கள் உட்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அழைப்பிதழ்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான மற்றும் ரயில் சேவைகள் அயோத்தியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலில், சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வந்த அழைப்பிதழை, ஒடிசாவின் பூரி மடத்தின் சங்கராச்சாரியான சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி நிராகரித்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

மோடி, பூரி சங்கராச்சாரியார்
அயோத்தி: ராமர் கோயில் மூலவர்... கர்நாடக சிற்பி செய்த சிலை தேர்வு!

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எங்கள் மடத்துக்கு அயோத்தியிலிருந்து அழைப்பிதழ் வந்துள்ளது. நான் அங்கு செல்வதாக இருந்தால், ஒரு உதவியாளருடன் வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு பேருடன் வந்தாலும் அனுமதிக்கப்படுவீர்கள் என்று சொன்னாலும்கூட, அந்த நாளில் நான் அங்கு செல்ல மாட்டேன். நான் சற்றும் வருத்தப்படவில்லை. ஆனால் மற்ற சனாதன இந்துக்களைப்போலவே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் கடந்த காலம் முதல் அயோத்திக்குச் சென்று வருகிறேன், மேலும் ராமரை தரிசனம் செய்வதற்காக எதிர்காலத்தில் அதே நகரத்திற்கும் செல்வேன். குறிப்பாக பல நூற்றாண்டுகளாக தடைப்பட்ட ராமர் கோயில் பணிகள், இறுதியாக நடைபெற்று வருகிறது.

கோவர்தன பீடம்/மடத்தின் அதிகார வரம்பு பிரயாக் வரை பரவியுள்ளது. ஆனால் குடமுழுக்கு நிகழ்ச்சி குறித்து எங்களிடம் ஆலோசனையோ அல்லது வழிகாட்டுதலோ பெறப்படவில்லை. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தன்னை மதச்சார்பற்றவராக சித்தரிப்பதில் விருப்பம் இல்லாதவர். அவர் தைரியமானவர்; இந்துத்துவாவாதி மற்றும் சிலை வழிபாட்டின் கருத்தாக்கத்தில் பெருமைகொள்கிறார். அவர் தன்னை மதச்சார்பற்றவராக காட்டிக்கொள்ளும் கோழை அல்ல. ஆனால், சங்கராச்சாரியார் என்ற முறையில் நான் அங்கு என்ன செய்வேன், பிரதமர் மோடி சிலையைத் தொட்டு அங்கு நிறுவும்போது, ​​நான் அவரை கைதட்டி வாழ்த்த வேண்டுமா? சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் விதியின்படிதான், மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை தொட்டு, கோயிலின் கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யும்போது, ஒரு சங்கராச்சாரியராக நான் என்ன செய்ய வேண்டும்? அவர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது நான் அங்கே நின்றுகொண்டு கைதட்ட வேண்டும் என்றோ அல்லது அவருக்காக வெற்றி முழக்கம் எழுப்ப வேண்டும் என்றோ எதிர்பார்க்கிறீர்களா? எனது பொறுப்புக்கு என்று ஒரு மரியாதை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நியூசிலாந்து: நாடாளுமன்ற அவையை அதிரவிட்ட இளம் பெண் எம்.பி.... வைரல் வீடியோ!

முன்னதாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய இருக்கும் பிரதமர் மோடி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில், “ராமர் தனது மனைவி சீதையை மீட்பதற்காக ஏறக்குறைய ஒன்றரை தசாப்தங்களாகப் போரிட்டவர். அப்படிப்பட்ட ராமரின் பக்தர்களான நாம், மனைவியைக் கைவிட்ட மோடியை எப்படி ராமர் கோயில் பூஜைக்கு அனுமதிக்கலாம்” எனக் கேள்வி எழுப்பியிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

இதையும் படிக்க: WTC Points Table: வரலாற்று வெற்றிக்கு பிறகு 6வது இடத்திலிருந்து நம்.1 இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com