அயோத்தி: ராமர் கோயில் மூலவர்... கர்நாடக சிற்பி செய்த சிலை தேர்வு!

அயோத்தி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் மூலவர் சிலை, கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பியால் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில், அருண் யோகிராஜ்
ராமர் கோயில், அருண் யோகிராஜ் ட்விட்டர்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில் கடந்த 2019/ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிந்து வரும் 22-ஆம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கும்பாபிஷேக விழாவில் 3 ஆயிரம் விஐபிக்கள் உட்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான மற்றும் ரயில் சேவைகள் உள்பட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தின்போது கோயில் கருவறையில், மூலவர் ராம் லல்லா சிலை நிறுவப்பட இருக்கிறது. இதில் ராம் லல்லா சிலை என்பது ராமரின் குழந்தை வடிவ சிலையாகும். 5 வயது குழந்தையாக இருக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்பதை உருவகப்படுத்தி சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று ராமர் சிலைகள் தயாரிக்கப்பட்டு இருந்தன. அவற்றிலிருந்து ஒரு சிலையை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு, கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது.

மும்பையைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர் வாசுதேயோ காமத், ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கிய ஓவியத்தின் அடிப்படையில் ராம் லல்லா சிலைகள் உருவாக்கப்பட்டன. கர்நாடகாவச் சேர்ந்த பிரபல சிற்பிகளான கணேஷ் பட், அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த சத்ய நாராயண் பாண்டே ஆகியோர் ராம் லல்லாவின் மூன்று சிலைகளை வடித்தனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சிற்பிகள் கருங்கற்களையும், ராஜஸ்தானைச் சேர்ந்த சிற்பி வெள்ளை மக்ரானா பளிங்குக் கற்களையும் பயன்படுத்தி சிலைகளை உருவாக்கினர். தொடர்ந்து, கடந்த 30-ஆம் தேதி சிலை தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், 5 வயதுடைய குழந்தை வடிவிலான ஒரு சிலையை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஓட்டெடுப்பு வாயிலாக தேர்வு செய்தனர். இதன் முடிவில், கர்நாடகாவைச் சேர்ந்த சிற்பி உருவாக்கிய ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்து உள்ளார். இந்த சிலை 51 அங்குலம் உயரம் கொண்டது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, “ராமர் இருக்கும் இடத்தில் அனுமன் இருக்கிறார். அயோத்தியில் ராமர் கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கான சிலை தேர்வு முடிவடைந்தது. நம் நாட்டின் புகழ்பெற்ற சிற்பி, நமது பெருமைக்குரிய அருண் யோகிராஜ் வடித்த ராமர் சிலை அயோத்தியில் நிறுவப்படும். ராம - அனுமனின் பிரிக்க முடியாத உறவுக்கு இது மற்றொரு எடுத்துக்காட்டு. அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து ராம்லல்லானிக்கு கிடைக்கும் ஒரு முக்கியமான சேவை என இதை குறிப்பிடுவதில் தவறில்லை” என தெரிவித்துள்ளார்.

இத்தகைய சிலையை வடிவமைத்த மைசூரின் அருண் யோகிராஜ் குடும்பம், 200 ஆண்டுகளாக சிற்பங்கள் செதுக்குவதில் சிறந்து விளங்குகிறது. அவரது தந்தை, தாத்தா, கொள்ளு தாத்தா என ஐந்து தலைமுறையாக பரம்பரை தொழிலாக செய்து வருகின்றனர். குறிப்பாக, இவர் வடிவமைத்த கேதார்நாத்தில் உள்ள ஆதி சங்கராச்சாரியார் சிலை, புதுடெல்லியின் இந்தியா கேட் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சுபாஷ் சந்திர போஸ் சிலைகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, அருண் யோகிராஜ், “ராம லல்லா சிலை வடிவமைக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்” எனத் தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தால், அயோத்தி நகரம் விழாக்கோலத்திற்கு மாறத் தொடங்கி இருக்கும் நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்பட இருக்கிறது. இந்த தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com