பஞ்சாப் | சிவசேனா தலைவர் சுட்டுக் கொலை.. அரசுக்கு எதிராக கண்டனம்!
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவசேனா குழுவின் மாவட்டத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சிவசேனா கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தவர், மங்கத் ராய் மங்கா.
இவர், நேற்று இரவு பால் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில், ஒரு சிறுவன் பலத்த காயமடைந்தான். இதுகுறித்து போலீசார், “நேற்று இரவு 10 மணியளிவில் பால் வாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்த மங்காவை, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் முதலில் 12 வயது சிறுவன் காயமடைந்தான். இதைக் கண்டு தப்பித்த மங்காவை, அந்த மர்மநபர்கள் விரட்டிச் சென்று சுட்டுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த மங்காவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அவரது மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தனர். இறந்துபோன மங்கா, எந்த சிவசேனாவின் தலைவர் என விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் தலைமையில் உண்மையான சிவசேனாவும், முன்னாள் முதல்வர் உத்தவ் ராவ் தலைமையில் பிரிவு சிவசேனாவும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மங்கா சுடப்பட்ட சம்பவம் குறித்து வலதுசாரி குழுவான விஸ்வ இந்து சக்தியின் தேசியத் தலைவர் ஜோகிந்தர் சர்மா, "சில மர்ம நபர்கள் மங்காவைச் சுட்டுக் கொன்றதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், நாங்கள் மருத்துவமனைக்குச் சென்றோம்" என்றார்.
மங்காவின் மகள் பிடிஐக்கு அளித்த பேட்டியில், "இரவு 11 மணியளவில் யாரோ ஒருவர் என் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டதாக எங்களுக்குத் தகவல் அளித்தார். எங்களுக்கு நீதி வேண்டும், அதற்காக நாங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வோம்" என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பஞ்சாப்பில் மேலும் இன்னொரு இடத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. பாகியானா பஸ்தியில் உள்ள முடிதிருத்தும் கடை ஒன்றில் இரவு 9 மணியளவில் ஹேர்கட் செய்வதற்காக மூன்று பேர் உள்ளே நுழைந்து, உரிமையாளர் தேவேந்தர் குமார் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தேவேந்தர் குமார் காயமடைந்துள்ளார். இந்த நிலையில் பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் கூறி, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்துள்ளன.