‘ரூ.1 கோடி நிதி, தங்கைக்கு அரசு வேலை’ - பலியான விவசாயி குடும்பத்திற்கு நிவாரணம் அளித்த பஞ்சாப் அரசு!

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், அவருடைய தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
சுப் கரண் சிங்
சுப் கரண் சிங்ட்விட்டர்

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் - ஹரியானா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. முன்னதாக, விவசாயச் சங்கத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே 4 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தச் சுமுகத்தீர்வும் ஏற்படவில்லை.

இதையடுத்து விவசாயிகள் மீண்டும் டெல்லியை நோக்கி முன்னேறும் வகையில் திட்டமிட்டனர். இதற்காக பிப்.21 அன்று ஜே.சி.பி., கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களை ஷம்பு எல்லைக்கு விவசாயிகள் கொண்டுவந்ததால் பதற்றம் உருவாகியது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைப் பிரிக்கும் கானௌரி எல்லை அருகே விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

சுப் கரண் சிங்
போராட்டத்தில் இளம்விவசாயி பலி: பிரேதப் பரிசோதனை தடுத்து நிறுத்தம்.. விவசாயிகள் வைக்கும் கோரிக்கை!

Shubh Karan Singh எனக் கண்டுகொள்ளப்பட்ட அந்த இளம் விவசாயி, காயம் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தது. போலீஸ் துப்பாக்கிச் சூடு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக விவசாயி தலைவர் சர்வான் பந்தேர் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தச் சம்பவத்தை ஹரியானா காவல் துறை மறுத்திருந்தது. எனினும், சுப் கரணின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.

சுப் கரண் சிங்
போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு; போராட்டம் 2 நாட்கள் ஒத்திவைப்பு
டெல்லி விவசாயிகள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு
டெல்லி விவசாயிகள் போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீச்சு

இதைத்தொடர்ந்து போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையை இன்று (பிப்.23) மாலை முடிவு செய்வதாகவும் விவசாய சங்க தலைவர்கள் அறிவித்திருந்தனர். அதேநேரத்தில், பலியான இளம் விவசாயி சுப் கரண் சிங்கின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்திருந்ததுடன், ‘பஞ்சாப் அரசு அவரை தியாகி என அறிவித்து, அதற்கேற்ப சலுகைகளை வழங்க வேண்டும். மேலும், பிரேதப் பரிசோதனையை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அரசு அமைக்க வேண்டும். அவரது குடும்பத்துக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டில் ஒரு பகுதியாக மத்திய அரசு வேலை வழங்க வேண்டும்’ உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், பலியான விவசாயி சுப் கரண் சிங் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண உதவியாக அளிக்கப்படும் எனவும், விவசாயியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேலும் ’துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com