பஞ்சாப் | தலைவருடன் சந்திப்பு.. ராஜினாமாவைத் திரும்பப் பெற்ற ஆம் ஆத்மி MLA
பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல பாடகி அன்மோல் ககன் மான், 2021ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். பின்னர், அடுத்த ஆண்டே பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் கரார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து, ஆத் ஆத்மியின் பகவந்த் மானின் அரசாங்கத்தில், அன்மோல் ககன் மான் சுற்றுலா மற்றும் கலாசாரம், முதலீட்டு மேம்பாடு, தொழிலாளர் மற்றும் விருந்தோம்பல் போன்ற இலாகாக்களை வகித்தார். இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போது அவர் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், அன்மோல் ககன் மான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளதாக. தனது சமூக ஊடகத்தில் தெரிவித்திருந்தார். இதுகுறித்த அந்தப் பதிவில், ”என் இதயம் கனமாக இருக்கிறது. ஆனால் நான் அரசியலைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன். எம்.எல்.ஏ பதவியில் இருந்து எனது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சிக்கு எனது வாழ்த்துகள். பஞ்சாப் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
அன்மோல் ககன் மான் தனது ராஜினாமாவை கடந்த 19ஆம் தேதி முறைப்படி அறிவித்திருந்தாலும், ஏற்கெனவே அவர் தனது ஆவணங்களை ஒரு மாதத்திற்கு முன்பே சபாநாயகரிடம் சமர்ப்பித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இருப்பினும், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கட்சி அவரை வலியுறுத்த முயன்றது. இந்த நிலையில், தன்னுடைய ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அன்மோல் ககன் மான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவர் அமன் அரோரா, அன்மோல் ககன் மானை நேரில் சந்தித்து ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தையதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. "கட்சி மற்றும் தொகுதியின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றுமாறு (அவரை) கேட்டுக் கொண்டேன். அன்மோல் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்தார், இருக்கிறார், இருப்பார்" என அமன் அரோரா தெரிவித்ததாக அன்மோல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தனது பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற ஒப்புக் கொண்டதாக அன்மோல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.