பஞ்சாப் ஆம்ஆத்மி எம்எல்ஏ ராஜினாமா.. அரசியலுக்கு முழுக்கு.. யார் இந்த அன்மோல் ககன் மான்?
யார் இந்த அன்மோல் ககன் மான்?
பஞ்சாப்பின் மான்சா மாவட்டத்தைச் சேர்ந்த அன்மோல் ககன் மான், பாடகியாக அறிமுகமாகி, பின்னர் அரசியலில் நுழைந்தவர். 2021ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவர், 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் கரார் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அன்மோல் ககன் மான், சிரோமணி அகாலிதளத்தின் ரஞ்சித் சிங் கில்லை 37,718 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். தவிர, 2022 பஞ்சாப் தேர்தலின்போது, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது குறித்து அன்மோல் ககன் மான் கூறிய கருத்துகள் வைரலானது. மேலும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து ஆம் ஆத்மி தேர்ந்தெடுக்கப்பட்டால், விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான குறைந்தபட்ச ஆதரவு விலையை 'ஐந்து நிமிடங்களில்' கட்சி முடிவு செய்யும் எனக் கூறினார். பின்னர் ஆத் ஆத்மியின் பகவந்த் மானின் அரசாங்கத்தில், அன்மோல் ககன் மான் சுற்றுலா மற்றும் கலாசாரம், முதலீட்டு மேம்பாடு, தொழிலாளர் மற்றும் விருந்தோம்பல் போன்ற இலாகாக்களை வகித்தார். இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போது அவர் நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், அன்மோல் ககன் மான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததுடன், தனது பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். தனது சமூக ஊடகம் வாயிலாக மூலம் ராஜினாமா செய்வதை அறிவித்துள்ளார். அதில் அவர், பஞ்சாபி மொழியில் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அந்தப் பதிவில், ”என் இதயம் கனமாக இருக்கிறது. ஆனால் நான் அரசியலைவிட்டு வெளியேற முடிவு செய்துவிட்டேன். எம்.எல்.ஏ பதவியில் இருந்து எனது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள வேண்டும். கட்சிக்கு எனது வாழ்த்துகள். பஞ்சாப் அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் என்று நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அன்மோல் ககன் மான் தனது ராஜினாமாவை இன்று முறைப்படி அறிவித்திருந்தாலும், ஏற்கெனவே அவர் தனது ஆவணங்களை ஒரு மாதத்திற்கு முன்பே சபாநாயகரிடம் சமர்ப்பித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கட்சி அவரை வலியுறுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வார தொடக்கத்தில், அன்மோல் ககன் மான் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பல்வேறு முக்கிய பிரசினைகள் குறித்துப் பேசியிருந்தார்.