புனே: பள்ளிக்கழிவறைகளில் CCTV? குற்றச்சாட்டினால் பள்ளி முதல்வரை தாக்கிய நபர்கள் - நடந்தது என்ன?

புனேவில் தலேகானில் உள்ள DY பாட்டீல் உயர்நிலைப் பள்ளியில் முதல்வராக பணிபுரியும் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட் என்பவர் மாணவர்களை கிறிஸ்துவ ஜபங்களை வாசிக்கும் படி கட்டாயப்படுத்தியதாக தாக்கப்பட்டார். விசாரணையில் அவர் அப்படி செய்யவில்லை என தெரியவந்துள்ளது
principal
principalptweb

புனே தலேகானில் உள்ள DY பாட்டீல் உயர்நிலைப் பள்ளியில் ஏறத்தாழ 900 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் கழிவறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இத்துடன் பள்ளியில் கிறிஸ்தவ மத வழிபாடுகள் நடத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவற்றை கேட்பதற்காக பஜ்ரங்தள் உறுப்பினர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் சில பெற்றோர்கள் கடந்த ஜூலை 4 ஆம் தேதி பள்ளிக்கு சென்றனர். அப்போது நடந்த பேச்சு வார்த்தைக்கு இடையே, வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த அமைப்பினரால் பள்ளியின் முதல்வர் தாக்கப்பட்டார். அப்போது சுற்றிலும் இருந்த கூட்டத்தினர், ‘ஹரஹர மஹாதேவ்’ என கோஷங்களை எழுப்பி முதல்வரின் சட்டையை கிழித்தனர். இதுதொடர்பாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பள்ளி முதல்வர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

principal
principalpt web

தொடர்ந்து பிம்ப்ரி சின்ச்வாட் பகுதி காவல்துறையினர் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கிறிஸ்துவ ஜபங்களை வாசிக்க மாணவர்களை கட்டாயப்படுத்தியதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கழிவறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை என்றும் கழிவறைகளின் வெளியே மாணவர்கள் கை கழுவும் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

முன்னதாக இது குறித்து அளிக்கப்பட்டுள்ள புகாரில், “பள்ளிகளில் கிறிஸ்தவ பிரார்த்தனைகள் பின்பற்றப்படுகின்றன. இந்துப் பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. பெண்களின் கழிவறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்” என கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே மாணவி ஒருவரின் பெற்றோர், கடந்த ஜூன் மாதத்தில் தனது மகளையும் மற்ற மாணவர்களையும் பள்ளியின் பெஞ்ச்களை சீரமைக்க சொன்னதாகவும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர்கள் பேசும்போது, “வெள்ளை ரிப்பனால் தலைமுடியை ஒழுங்காகக் கட்டாததற்காக பெஞ்ச்களை சீரமைக்கச் சொல்லியுள்ளனர். இது குறித்து புகார் அளிக்க நான் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளரைத் தொடர்பு கொண்டபோது அவர்கள் கடுமையாக நடந்து கொண்டனர். இது என் குழந்தையைப் பற்றியது மட்டுமல்ல.

பள்ளியின் மற்ற ஆசிரியர்களும் பிற மாணவர்களையும் துன்புறுத்துகின்றனர். மாணவர்கள் தாழ்வாரத்தில் உட்காரவைக்கப்பட்டு ஆசியர்கள் அவர்களைத் திட்டி காதுகளைப் பிடித்து இழுக்கின்றனர். ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக குறிவைக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளியின் முதல்வரும் துணையாக உள்ளார். பள்ளிகளின் கழிவறைகளில் சிசிடிவி கேமிராக்களை நிறுவியுள்ளனர்” என தெரிவித்தார்.

இப்படி பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில்தான், பள்ளி முதல்வர் தாக்கப்பட்டார். முதல்வருடனான கைகலப்பு குறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், “ஜூலை 4 ஆம் தேதி பள்ளி முதல்வரின் காருக்காக நின்று கொண்டிருந்தோம். கார் வந்ததும் அதை மறைத்து கதவை திறந்து அவரை இறங்குமாறு கூறினோம். அப்போது அவர் என்னை தள்ள முற்பட்டார். அப்போதே மோதல் ஏற்பட்டது. நானும் ஒரு கான்வென்ட் பள்ளியில்தான் படித்தேன். மத காரணங்களுக்காக இம்முதல்வர் தாக்கப்பட்டதாக வெளியான செய்தி சரியானது அல்ல. அனைத்து மதங்களிலும் ஒன்று என்றே நானும் நம்புகிறேன். முரட்டுத்தனமான நடத்தை மற்றும் கழிவறைகளில் சிசிடிவி கேமிராக்கள் போன்ற காரணங்களுக்காகவே அவர் தாக்கப்பட்டார்” என்றார்.

மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள பஜ்ரங் தளத்தின் ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து கூறுகையில், பெற்றோர் தன்னை அணுகி, ஜூலை 4 ஆம் தேதி தங்களுடன் வருமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். அவர் கூறுகையில், “டி.ஒய்.பாட்டீல் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்தவ முதல்வர் அலெக்சாண்டரால் நடத்தப்படுகிறது. 2-4 கிறிஸ்தவ ஆசிரியர்களும் ஒரு முஸ்லிம் ஆசிரியரும் உள்ளனர். ஓய்வு நேரத்தில், இந்துக்கள் கிறிஸ்தவர்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறார்கள் என்பதை ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்வார்கள் என்று பெற்றோர் கூறினர். எங்களுக்கு அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், பின்னர் அவர்கள் மாணவர்களை தேவாலயத்திற்கு செல்லச் சொல்லத் தொடங்கினர். தேவாலயத்திற்குச் சென்ற மாணவர்களுக்கு அவர்கள் அதிக மதிப்பெண்கள் கொடுத்தனர்” என தெரிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றே இது குறித்து விசாரிக்கும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அங்கு பணிபுரியும் பெயர் கூற விரும்பாத ஆசிரியர் இது குறித்து கூறும் பொழுது, “நானும் ஒரு இந்து. கிறிஸ்துவப் பிரார்த்தனைகளை மாணவர்கள் வலுக்கட்டாயமாக சொல்ல வைப்பதை நான் கண்டதில்லை. மாணவர்களிடையே நடக்கும் சண்டை மற்றும் தவறுகளைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கூட அந்த கழிவறைகளைத் தான் பயன்படுத்துகின்றனர். ஆசிரியர்களின் குழந்தைகள்கூட இங்கு படிக்கிறார்கள். கேமராக்கள் தவறான நோக்கத்திற்காக பொருத்தப்பட்டு இருந்தால் அவர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள்?” என்றார்.

இது குறித்து பள்ளியின் முதல்வர் கூறுகையில், “நிர்வாகம் என் பக்கம் உள்ளது. இந்த விஷயத்தைப் பற்றி எதுவும் கூறுவதற்கு முன்பு அவர்கள் என்னை இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். அவர்கள் என்னைக் கவனித்துக்கொள்வார்கள், நான் பயப்பட ஒன்றுமில்லை. எனது சொந்த மக்களுக்கு எதிராகச் செயல்படும் நபர் நான் இல்லை. நான் இந்தப் பள்ளியின் நிறுவனர் மற்றும் முதல்வர். கடந்த 6 ஆண்டுகளாக இந்தப் பள்ளியை நடத்தி வருகிறேன். இந்த விஷயம் இப்போது ஏன் தலைதூக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “மாணவர்களின் கை கழுவும் பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டது குறித்து மாணவர்களுக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் கழிவறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவில்லை என்பதே விசாரணை அதிகாரிகளின் கருத்தாக உள்ளது.

பள்ளி மாணவர்கள் கடந்த காலங்களில் கண்ணாடி மற்றும் வாஷ்பேசின்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தடுப்பதற்கே சிசிடிவி கேமிராக்களை கை கழுவும் இடங்களில் பொருத்தியுள்ளதாக பள்ளி தரப்பினர் தெரிவித்தனர். தற்போதைக்கு பள்ளி ஆசிரியர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. நடவடிக்கை எடுக்கச்சொல்லி எங்களை அணுகினால் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com