புதுச்சேரி | ரேஷன் கடைகள் இல்லை என்ற விஜய்.. பொங்கல் பரிசை அறிவித்த அரசு..
புதுச்சேரி அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 மதிப்புள்ள பரிசு தொகுப்புகளை ரேஷன் கடைகள் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. விஜய் ரேஷன் கடைகள் இல்லையென கூறிய நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அமைச்சர் நமச்சிவாயம், விஜயின் குற்றச்சாட்டை மறுத்து, ரேஷன் கடைகள் செயல்படுகின்றன என தெரிவித்தார்.
புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.750 மதிப்புள்ள பச்சரிசி, நாட்டு சர்க்கரை, பாசி பருப்பு, நெய், சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட 5 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்புகளை அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகுப்பை ஜன.3ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஜயின் விமர்சனம்
நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் புதுச்சேரி மாநிலத்தின் பிரச்னைகள் எனக் குறிப்பிட்டு பேசும்போது ரேஷன் கடைகள் இல்லாத ஒரே மாநிலம் புதுச்சேரி எனக் குறிப்பிட்டு பேசியது புதுச்சேரி அரசியல் களத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
பாஜக அமைச்சரின் பதில்
விஜயின் இந்த விமர்சனம் குறித்து பாஜகவைச் சேர்ந்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதிய தலைமுறையிடம் பேசும்போது, "ரேஷன் கடைகள் திறந்து மாத மாதம் விலையில்லா அரிசியை மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கையில் ரேஷன் கடைகள் இல்லையென முதலமைச்சர் ரங்கசாமியை விஜய் குறை சொல்கிறார். ரேஷன் கடை என்பது மாநில அரசினுடையதா? மத்திய அரசினுடையதா? விஜயின் பேச்சு என்பது என்.ஆர் காங்கிரஸை அவரது கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி" எனத் தெரிவித்திருந்தார்.
இன்று செய்தியாளர்களையும் சந்தித்த அவர், "நேற்று தவெக தலைவர் விஜய் மாநில அந்தஸ்து குறித்து பேசியுள்ளார். மாநில அந்தஸ்து இப்போது வந்த பிரச்னை இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதில் இருந்து மாநில அந்தஸ்தை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், விஜய் இப்போதுதான் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்காதது போல் பேசியுள்ளளார். புதுச்சேரியில் ரேஷன் கடைகளே இல்லை என அவர் பேசியுள்ளார். அது பொய்யான தகவல். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலமாக தான் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.
யார் யாருக்கு பொங்கல் பரிசு?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் கெளரவ ரேஷன் அட்டைதாரர்களை தவிர்த்து அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் 5 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசினை இலவசமாக வழங்க புதுச்சேரி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரேஷன் கடைகளில் பரிசு பொருள்கள் தொகுப்பு வழங்குவதை அரசு கூட்டுறவு நிறுவனமான கான்பெட் மூலம் செயல்படுத்துகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
கொள்முதல் மற்றும் விநியோகம்
மேலும், புதுச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் (பொன்லைட்) இருந்து நெய் கொள்முதல் செய்வதற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் தவிர்த்து மற்ற பொருட்கள் ஆன்லைன் டெண்டர் செயல்முறை மூலம் கொள்முதல் செய்ய கான்பேட் நிறுவனம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமை பொருள் வழங்கல்துறை மூலம் புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கான்பேட் நிறுவனத்தின் அதிகாரியிடம் கேட்டபோது, 'பொங்கல் பரிசு தொகைக்காக 5 பொருட்களை வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பொருட்களை கொள்முதல் செய்வதற்கான ஆன்லைன் டெண்டர் வருகிற 29ம் தேதி நடைபெறும். பிறகு, டெண்டர் முடிந்தவுடன் அரசின் அனுமதி பெற்று, டெண்டர் எடுத்த நிறுவனத்திடம் இருந்து பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதல் செய்யப்படும். ஜன.3ம் தேதி முதல் ரூ.750 மதிப்புள்ள 5 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும். புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் அரசு மற்றும் கெளரவ ரேஷன் அட்டைதாரர்களை தவிர்த்து 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள்' என்றார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு
பச்சரிசி-4 கிலோ
நாட்டு சர்க்கரை-1 கிலோ
பாசி பருப்பு-1 கிலோ
நெய்-300 கிராம்
சூரியகாந்தி எண்ணெய்-1 லிட்டர்
பை-1
என ஆறு பொருள்கள் கொண்ட தொகுப்பினை பொங்கல் பரிசாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
கடந்த வருடம் புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் சிறப்பு பரிசாக 500 ரூபாய் ரொக்க பணம் வங்கியில் செலுத்தப்பட்ட நிலையில், இந்த வருடம் சிறப்பு தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் இல்லை என விஜய் குற்றம் சாட்டியது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் இன்று ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

