வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சிweb

’வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி..’ தமிழகத்தில் மழை நிலவரம் என்ன?

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..
Published on
Summary

தென்மேற்கு வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். நாகையில் கனமழை காரணமாக மக்கள் சிரமமடைந்துள்ளனர். திருவாரூரில் மழைநீர் தேங்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 27ஆம் தேதி தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின்னர் புயலாக உருவெடுத்தது ’டிட்வா’ புயல். இலங்கை கடற்கரையை ஒட்டி உருவாகிய டிட்வா புயல், இலங்கையில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திவிட்டு தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. சென்னையிலிருந்து 40கிமீ தொலைவில் நிலைகொண்ட டிட்வா, தமிழகம் முழுவதும் பரவலான மழையை ஏற்படுத்திவிட்டுச் சென்றது..

டிட்வா புயல்
டிட்வா புயல்pt

இந்தசூழலில் தான் மீண்டும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

புதுக்கோட்டை மீனவர்கள் எச்சரிக்கை..

கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், மறு உத்தரவு வரும் வரை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

தென் தமிழக கடற்பகுதிகளில் காற்றின் வேகம் 45 கிலோமீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும், அதிகபட்சமாக 65 கிலோ மீட்டர் வரையிலும் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால், கடந்த மாதம் 18 நாட்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருந்த மீனவர்களின் வாழ்வாதாரம், மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

நாகையில் பரவலாக கனமழை..

கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. நாகூர், புத்தூர், பனங்குடி, பெருங்கடம்பனூர்,சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்ததால், பள்ளி மாணவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் சிரமமடைந்தனர்.

இதனிடையே, வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.. இதனால் படகுகள் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

20 நாட்களாக வடியாத மழைநீர்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் 20 நாட்களுக்கும் மேலாக மழைநீர் வடியாததால், சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வட சங்கேந்தி, குமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 ஏக்கருக்கும் அதிகமான சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வீணாகிவிட்டன. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

மழை
மழைpt web

வயல்களில் தேங்கியுள்ள நீரை உடனடியாக வடியவைக்க, நீர்வளத் துறையினர் ஆகாயத்தாமரைகளை அகற்றி வடிகால்களைச் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com