ரேபிடோ பைக் டாக்சிக்கு தடை விவகாரம் - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

தமிழ்நாட்டில் ரேபிடோ செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கும்படி காவல் துறை பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
Rapido Bike Taxi
Rapido Bike TaxiFile Image

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்துவது குற்றம் எனக் கூறி, ரேபிடோ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில் இருந்து நீக்க சென்னை மாநகர காவல்துறை பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், காவல் துறை பரிந்துரையில் தவறில்லை என உத்தரவிட்டது.

Madras High Court
Madras High CourtTwitter

இந்த உத்தரவை எதிர்த்து ரேபிடோ சார்பில் 2019ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை மாநகர காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் பைக் டாக்ஸி தொடர்பாக தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, ரேபிடோ பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, தலைநகர் டெல்லியில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகக் கூறி, அந்த உத்தரவு நகல் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

Rapido Bike Taxi
Rapido Bike Taxi

மேலும், தமிழகத்தில் பைக் டாக்சி தொடர அனுமதிக்கும் வகையில், காவல் துறை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com