
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முதல் காட்சி வெளியாகியுள்ளது. செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் சிக்னல் அருகே வெள்ளை நிற கார் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது அது திடீரென வெடித்து மிகப்பெரிய தீப்பிழம்பு எழும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் குண்டு வெடிப்பு குறித்த விசாரணையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. ஏற்கெனவே அந்த வெள்ளை நிற காரின் சிசிடிவி காட்சிகள் பல வெளியாகியிருந்தன. ஹரியானாவின் ஃபரீதாபாத்தில் தொடங்கி வெடிப்பு பகுதி வரை அந்தகார் 11 மணி நேரம் பயணித்த நிலையில் இடையிலுள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தையும் கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை, குண்டுவெடிப்பு என்று டெல்லி காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். டெல்லி - செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, திங்களன்று மாலை, கார் ஒன்று வெடித்துச் சிதறியது. 13 பேரின் உயிரை பலி கொண்ட இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுவரை 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். நாட்டின் தலைநகரில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை, முதலில் விசாரித்த டெல்லி கோட்வால் காவல் துறையினர், தொடக்கத்தில் இருந்தே கார் வெடிப்பு என்றே கூறி வந்தனர். குண்டுவெடிப்பு என்று கூறவில்லை. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதங்கள் வெடித்தன. இந்நிலையில், ஒன்றரை நாளுக்குப் பிறகு, குண்டுவெடிப்பு என்று காவல் துறையினர் தங்களது முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி கார் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை, நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் கூறினார். பூடான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கார் குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்த அவர், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என மீண்டும் உறுதியளித்தார்.
பிஹார் தேர்தலில் என்டிஏ வெல்லும் என வெளியான கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்டவை என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இண்டியா கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். கடந்த முறையை விட இம்முறை 72 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக வாக்களித்துள்ளனர் என்றும் இதிலிருந்தே ஆட்சி மாற்றம் உறுதியாவதாகவும் அவர் கூறினார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளை தங்கள் கட்சியினர் கூர்ந்து கவனிப்பார்கள் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
மத்திய அரசு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயனாளர்களின் தகவல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் முக அடையாளம் மூலம் திறக்கும் ஃபேஸ் லாக் வசதி உள்ளிட்ட வசதிகளும் உள்ளது. ஆதார் அட்டையை டிஜிட்டல் வடிவில் சேமிக்க முடிவதால் அதை தேவைப்படும் இடங்களில் எளிதாக தர இயலும். ஒரே மொபைல் ஃபோனில் 5 பேரின் ஆதார் விவரங்கள் வரை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். ஏற்கனவே உள்ள எம் ஆதார் செயலியில் இருக்கும் வசதிகளுடன் கூடுதல் வசதிகள் புதிய செயலியில் தரப்படுகின்றன. ஆண்டிராய்டு, ஐஓஎஸ் ஆகிய இயங்குதளங்களில் புதிய செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கும் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும், பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், பல்வேறு வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை அளிக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தகட்டமாக, படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில் சேவை அளிக்கும் நடவடிக்கையாக, அதற்கான பெட்டிகளை வடிவமைத்துள்ளது. இந்த ரயிலில் கடந்த ஆண்டு டிசம்பரிலும், கடந்த ஜனவரி மாதமும் முதற்கட்ட சோதனை நடந்தது. தற்போது 16 பெட்டிகள் கொண்ட ரெயிலை, ராஜஸ்தானில், 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கி நடத்தப்பட்ட சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளது.
பிஹார் தேர்தலில் இம்முறை வரலாறு காணாத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் இதில் பெண்கள் மிக அதிகளவில் வாக்களித்துள்ளதும் தெரியவந்துள்ளது. ஆண் வாக்காளர்களில் 62.8% பேர் வாக்களித்துள்ள நிலையில் பெண் வாக்காளர்களில் 71.6% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது ஆண்களை விட பெண்கள் சுமார் 9% அதிகம் வாக்களித்துள்ளனர். இம்முறை கட்சிகளும் பெண்களின் வாக்குகளை இலக்காக வைத்து பரப்புரை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சிறுத்தைத் தாக்குதலில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் நூலிழையில் தப்பியிருக்கிறார். கோலாப்பூரில் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை ஒன்று திரிந்தது. இதைப் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தடிகளுடன் துரத்தினர். ஓடியபோது காவலர்களில் ஒருவர் தடுக்கி கீழே விழுந்தார். அப்போது சிறுத்தை அவரைத் தாக்க முயன்றது. மற்ற காவலர்கள் கூச்சலிட்டதால் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. இந்த நடவடிக்கையின்போது காவலர் ஒருவர் உட்பட இருவர் லேசாகக் காயமடைந்தனர். சிறுத்தையை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்திப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சனாதன தர்மத்தை பாதுகாப்பதற்கென தனி வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார். திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை பின்னணியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகள் அவமதிக்கப்படுவதாகவும் புண்படுத்தப்படுவதாகவும் இது தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை தடுக்க உருவாக்கப்படும் வாரியத்திற்கு சம்மந்தப்பட்ட தரப்பினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா, மும்பை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். வீட்டில் இருந்தபடியே அவருக்கான சிகிச்சைகள் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலை ஏழு மணிக்கு அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக மும்பை தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். உடல்நலக்குறைவால் அவதிப்படும 89 வயதாகும் தர்மேந்திரா, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிப்படுவதும், வீடு திரும்புவதுமாக இருந்து வருகிறார்.