prince gajendra babu
prince gajendra babupt web

”கல்வி மாநில பட்டியலுக்கு வர இது நடக்கணும்” - 1950 முதலான வரலாற்றை விளக்குகிறார் கல்வியாளர் பிரின்ஸ்

கல்வி பொதுப்பட்டியலுக்கு போன பின் மத்திய அரசு எதாவது கல்வி நிலையங்களை தொடங்கியுள்ளதா? சிறப்புப் பள்ளிகள், மாதிரிப்பள்ளிகள் தவிர பொதுப்பள்ளிகளை எங்கு தொடங்கினார்கள்.

பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வி மீண்டும் மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் நீண்டகாலமாகவே முன்வைத்து வருகின்றன. கடந்த கால தேர்தலின் போது கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தேர்தல் வாக்குறுதிகளிலும் தேர்தல் அறிக்கைகளில் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வில் 2 முறை ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்து கொண்டதும், அவரது தந்தையும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவமும் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இச்சூழ்நிலையில் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

இதனையொட்டி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது,

“கல்வி மாநில பட்டியலுக்கு மீண்டும் வரவேண்டும் என்பது தொடர் கோரிக்கையே தவிர அது விட்டு விட்டு எழுப்பப்படுகிற கோரிக்கை அல்ல. கோரிக்கைக்கான போராட்டங்களில் வேண்டுமானால் சில இடைவெளிகள் இருக்கலாம். கோரிக்கைகளுக்கு பின் அழுத்தமான நியாயங்கள் இருக்கிறது.

ஜகதீசன்
ஜகதீசன் Puthiyathalaimurai

இந்தியா விடுதலை அடைந்து சட்டம் இயற்றி சட்டத்தின் ஆட்சி தொடங்கியது ஜனவரி 26 1950. அந்த நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் கட்டணமில்லா கட்டாயக் கல்வியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என அதில் எழுதி வைத்தார்கள். 1950களில் தொடங்கி இன்றைய தேதி வரை ஒன்றிய அரசு நடத்துகிற பள்ளிகள் சிறப்புப் பள்ளிகள் என்கிற வகையைச் சார்ந்தது. பொதுப்பள்ளிகள் கிடையாது.

தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என கிட்டத்தட்ட 50 ஆயிரம் அரசுப் பள்ளிகளை அரசு நடத்துகிறது. உயர்கல்வியைப் பொறுத்தவரை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை தான் மத்திய அரசு நடத்துகிறது. கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் சார்ந்த கல்லூரிகள் எல்லாம் மாநில அரசால் தொடங்கி நடத்தப்படுகிறது.

எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவைகள் எல்லாம் சிறப்பு அந்தஸ்து பெற்றவைகள். மருத்துவக் கல்லூரிகளை அந்தந்த மாநிலங்கள் தானே நடத்துகிறது. அவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளை நடத்திய அனுபவம் உள்ளது. மக்களது தேவைக்கு தகுந்தவாறு பள்ளி கல்லூரிகளை எப்படி உருவாக்க வேண்டும் என்ற அனுபவமும் உள்ளது. எனவே, மாநில அரசுக்கு கல்விக்கான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருப்பது தான் நியாயமான விஷயம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் போது 246 பிரிவின் கீழ் 7 ஆவது அட்டவணை அதிகாரப்பகிர்வைப் பேசுகிறது. அதன்படி ஒத்திசைவுப் பட்டியல் எனப்படும் பொதுப்பட்டியலில் உள்ள விஷயங்கள் மேல் ஒன்றிய அரசும் முடிவெடுக்கலாம். மாநில அரசும் முடிவெடுக்கலாம். முரண்பாடுகள் இருந்தால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அதைக் களையலாம்.

மக்களின் உடனடித் தேவைகள் அனைத்தையும் அவர்கள் மாநிலப்பட்டியலில் வைத்தார்கள். வங்கி ஒன்றியப் பட்டியலில் இருந்தால் கூட்டுறவு வங்கிகள் மாநிலப் பட்டியலில் உள்ளது. மக்களுக்கு உடனடித் தேவை, அவர்களின் நேரடிப் பங்கேற்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிலவற்றை மாநிலப்பட்டியலில் வைப்பார்கள். அதுபோல் தான் கல்வியையும் தொடக்க காலத்தில் மாநிலப்பட்டியலில் வைத்திருந்தார்கள்.

மாநிலப்பட்டியலில் உள்ள கல்வி பொதுப்பட்டியலுக்கு செல்லும் போது இந்தியாவில் உள்ள எந்த மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளிலும் அதைப் பற்றி விவாதிக்கவில்லை. பெரும்பான்மையான அரசியல் தலைவர்கள் சிறையில் இருந்தார்கள். அந்த சூழலில் தான் கல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு சென்றது. அதை மீண்டும் மாநிலப்பட்டியலில் வைப்பது தான் நியாயமான அணுகுமுறையாக இருக்க முடியும்.

குடியரசான முதல் பத்தாண்டுகள் அதாவது 1950 முதல் 1960 வரை மாநில அரசுகள் என்ன செய்தது என்பது தான் மிக முக்கியமான விஷயம். 1957 ஆம் ஆண்டு கேரளத்தில் அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு செய்த முதல் காரியம் கேரளா கல்வி மசோதா. ஒரு மாநில அரசு தன் பொறுப்பிலும் செலவிலும் கல்வியைக் கொடுக்கக்கூடிய சட்டத்தை இயற்றினார்கள். இந்தியாவில் கிட்டத்தட்ட 100% எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலம் கேரளா. அதற்கு முதல் காரணம் இந்த மசோதாவை நிறைவேற்றியது தான். அதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டிலும் மூன்று கிமீக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 5 கிமீக்கு உயர்நிலைப் பள்ளி என தொடங்கி ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரிகள், கல்லூரிகள் போன்ற பலவும் அந்த காலக்கட்டத்தில் திறக்கப்பட்டது. மாநிலப் பட்டியலில் கல்வி இருக்கும் போது இந்தியாவில் சில மாநிலங்கள் கல்வியை பரவலாக்கியது.

கல்வி பொதுப்பட்டியலுக்கு போனபின் மத்திய அரசு எதாவது கல்வி நிலையங்களை தொடங்கியுள்ளதா? சிறப்புப் பள்ளிகள், மாதிரிப்பள்ளிகள் தவிர பொதுப்பள்ளிகளை எங்கு தொடங்கினார்கள். கல்வி பொதுப் பட்டியலுக்கு சென்ற பிறகு தனியார் பள்ளிகள் பெருகியது. கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகமானது. ஃபின்லாந்து போன்ற நாடுகளில் மாணவர்களுக்கு தொடக்கத்தில் சில ஆண்டுகள் கட்டாயக்கல்வி கொடுக்கிறார்கள். அதை தனியார் கொடுத்தால் கூட கட்டணம் வாங்க முடியாது.

எழுத்தறிவு இல்லை என்றால் மாநில அரசிடம் கேட்கிறீர்கள், பொறுப்பை கொடுத்துவிட்டு அதிகாரத்தை வழங்கவில்லை என்றால் எப்படி? ஒன்றிய அரசு எதேச்சதிகாரத்தோடு முடிவெடுக்க இது வாய்ப்பாக அமைகிறது. அதிகார குவிப்பு இல்லாமல் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, கரன்சி விவகாரங்களில் மாநில அரசு தலையிட முடியாது. இதில் யாரும் பங்கு கேட்கவில்லையே.

பொருளாதார வல்லரசாக இந்தியா வளர்கிறது என சொல்லுகிறீர்கள். அதெல்லாம் உண்மை என சொன்னால் அரசமைப்புச் சட்டத்தின் படி அரசுதானே கல்வியை கொடுக்க வேண்டும். ஆனால் தனியாரை கல்வி நிலையம் நடத்த சொல்வதும் மக்களை கட்டணம் கட்டி படிக்க சொல்வதும் ஏன்.

பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வி மாறவேண்டுமானால் வலுவான போராட்டம் அவசியம். சட்டத்தை மக்கள் கோருகிறார்கள், அதை நிறைவேற்ற அரசு தயங்குகிறது என சொன்னால் அதற்கு எதிராக மக்கள் போராடி அதை நிறைவேற்ற வேண்டும். 2024ல் அரசியல் மாற்றம் வருமேயானால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட கட்சிகள் வென்று ஆட்சி அமைத்தால் நிச்சயமாக அதற்கு சாத்தியமுள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com