பிரதமர் மோடியின் மலேசிய பயணம் அறிவிப்பு.. எதிர்பார்ப்புகள் என்ன?
பிரதமர் நரேந்திர மோடியின் மலேசியப் பயணம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது பிரதமர் மோடி மலேசியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகும். 2024 ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு 'விரிவான மூலோபாயக் கூட்டாண்மை' என்ற நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இப்பயணத்தில் போது, பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார். இதில் வர்த்தகம், பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் குறித்து விவாதிக்கப்படும்.இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, 10-வது இந்தியா- மலேசியா சிஇஓ மன்றக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இரு நாட்டுத் தொழில் அதிபர்களுடன் பிரதமர் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலேசியாவில் சுமார் 29 லட்சம் இந்திய வம்சாவளியினர் வாழ்கின்றனர் (உலகிலேயே 3-வது பெரிய எண்ணிக்கை). அவர்களைச் சந்தித்து பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இதன் மூலம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த புதிய முதலீட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம். இந்தியப் பல்கலைக்கழகங்கள் மலேசியாவில் கிளைகளைத் தொடங்குவது மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். பிரதமர் மோடியின் இந்தப் பயணம், இந்தியாவின் 'கிழக்கே நோக்கிய கொள்கை' மற்றும் மலேசியாவுடனான வரலாற்று ரீதியான உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

