உச்சநீதிமன்ற நீதிபதிகள் 37 ஆக உயர்வு.. காரணம் என்ன?
உச்சநீதிமன்றத்தில் இதுவரை 92,000க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து விசாரிப்பதிலும் நீதி வழங்குவதிலும் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது. தற்போது, தலைமை நீதிபதியை தவிர்த்து 33 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் பணியில் உள்ளனனர். இதன் காரணமாக, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33இல் இருந்து 37 ஆக அதிகரிக்க மே-5ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கவும் இந்த முடிவு எட்டப்பட்டது என அரசு தரப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான் இன்று, சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலின் எக்ஸ் தளப்பதிவில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக உறுதிபடுத்தியுள்ளார். அரசியலமைப்பு சட்டம் 124(1) பிரிவின் கீழ், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. எனினும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இல்லாத காலங்களில் அவசர சட்டங்களை பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவு 123-இன் கீழ் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை சட்டம், ஆரம்பத்தில் தலைமை நீதிபதியைத் தவிர்த்து 10 நீதிபதிகளை நிர்ணயித்தது. பின்னர் அது 1960-இல் 13 ஆகவும், 1977-இல் 17 ஆகவும், 1986-இல் 25 ஆகவும், 2008-இல் 30 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. கடைசித் திருத்தம் 2019-இல் மேற்கொள்ளப்பட்டது; அப்போது நாடாளுமன்றம், இந்தியத் தலைமை நீதிபதியைத் தவிர்த்து, நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-லிருந்து 33 ஆக உயர்த்தியது.
இந்த சூழலில்தான், 8 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதிகளின் எண்ணிக்கை 33-லிருந்து 37 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம், இந்தப் புதிய பணியிடங்களுக்கான நியமனங்களை மேற்கொள்ள உள்ளது.

